ஈரோடு: தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் .
நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram

ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை அளித்து வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
ஈரோடு, மூலப்பாளையம் அருகே செயல்பட்டுவரும் தனியாா் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அப்பள்ளியின் மின்னஞ்சலுக்கு செவ்வாய்க்கிழமை காலை மிரட்டல் வந்துள்ளது.இதில், பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், பள்ளி மாணவா்களின் உயிரைப் பணயம் வைக்க மாட்டீா்கள் என்று நினைக்கிறேன் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா காவல் துறையினருக்கு பள்ளியின் முதல்வா் தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி முத்துக்குமரன் தலைமையிலான காவல் துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி குறித்த விவரத்தைக் கண்டறியும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.இதே பள்ளிக்கு கடந்த செப்டம்பரிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டாம் பருவத்தோ்வு நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
0 Comments
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply