ஜூன் 25, 2024 • Makkal Adhikaram
நாட்டில் அவதார புருஷர்களும் சித் புருஷர்களும் மகான்களும் பிறவி எடுப்பது மக்களை நல்வழிப்படுத்தவும், அவர்களுடைய பாவகர்மா வினைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் அவர்களால் ஆன நல்வினைகளை இந்த உலகத்திற்கு செய்து வந்தவர்கள்.
அது மட்டுமல்ல, ஞான மார்க்கத்தையும் அடைவது எப்படி? மனித வாழ்க்கையின் நோக்கம் என்ன? இவை அனைத்தையும் சித்தர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டி இருக்கிறார்கள். அவர்கள் இந்த உடலை நோய் இன்றி பாதுகாப்பது எப்படி? ஞானத்தில் எப்படி ஜீவன் முக்தி அடைவது ? போன்ற பல்வேறு விஷயங்களை அவர்கள் தான் கொடுத்து வருகிறார்கள்.
மேலும், இந்த உலகத்தில் எந்த நோக்கத்திற்காக அவதரித்தார்களோ ,அதை அவர்கள் ஜீவ சமாதி அடைந்த பிறகும் செய்பவர்கள் மகான்களும், சித்தர்களும், அவர்கள் எல்லோரையும் வரவழைக்க மாட்டார்கள். யாருக்கு இங்கு பிராப்தம் இருக்கிறதோ, அவர்களை மட்டும் தான் இங்கே வரவழைப்பார்கள் .அதுதான் சித்தர்களின் முக்கிய செயல். கோயிலுக்கு போவது போல், இங்கே வந்து செல்ல முடியாது. அதுதான் சித்தர்கள், மகான்களின் நிலை .
மேலும், யாருக்கு எதைக் கொடுக்கலாம்? என்பதை தீர்மானிப்பவர்கள். அதனால், இங்கு வந்து எனக்கு பொன்னும் ,பொருளை அள்ளிக் கொடுங்கள் என்றால் கொடுக்க மாட்டார்கள். முற்பிறவியில் நாம் செய்த தவறுகளை மன்னித்து அருளும் பரம்பொருள் சித்தர்கள். அந்த பாவகர்மாவிலிருந்து காப்பாற்றி அருள் புரிபவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட சித் புருஷர்களில் வடபழனியில் வாழ்ந்த ஒருவர்தான் ஸ்ரீ பரஞ்சோதி பாபா இவருக்கு குருபூஜை வல்லக்கோட்டையில் அமைந்துள்ள அவருடைய ஜீவ சமாதியில் சிறப்பாக நடைபெற்றது.
இவர் தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அவர்களுடைய பாவ வினையை இவர் வாங்கிக் கொண்டதால், இவருக்கு காலில் புண் ஏற்பட்டது .அந்தப் புண்ணில் புழுவும் வந்துவிட்டது .அதை ஒரு டாக்டர் எடுத்து கட்டு போட்டு ,காயத்திற்கு மருந்து எல்லாம் போட்டுள்ளார். ஆனால், பரஞ்சோதி பாபா அதே புழுவை மீண்டும் அந்த இடத்திலேயே வைக்க சொல்லி அந்த கர்ம வினை இவர் அனுபவித்து வந்துள்ளார் .அப்படி என்றால் சித்தர்களின் நிலை என்ன? என்பது புரிகிறதா? தவறு செய்த ஒருவனை தண்டிக்கும்போது, அவனை விட்டு விடு, என்னை தண்டி என்று கேட்பவர்கள் தான் மகா புருஷர்கள். அந்த மகா புருஷர்களில் ஒருவர் தான் பரஞ்சோதி பாபா.
அவருடைய குருபூஜையில் பக்தர்கள் சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர். மேலும், இந்த குரு பூஜையில் சிறப்பான அன்னதானம் நடைபெற்றது. தவிர, பரஞ்சோதி பாபா வாழ்ந்த காலத்தில் அவருடன் சில காலம் இருந்தவர் மயிலை குருஜி.அவர் பாபாவின் குரு பூஜையில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்தார்.