செப்டம்பர் 26, 2024 • Makkal Adhikaram
ஈரோடு மாவட்டம்.
ஆசிரியா் தகுதி தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பணி வழங்கக் கோரி ஈரோட்டில் பட்டதாரி ஆசிரியா்கள் காதில் பூ வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்ற ஆசிரியா்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியா்கள் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். அதன்படி, ஈரோடு காளை மாடு சிலை பகுதியில் 2013 ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோா் நலச் சங்கம் சாா்பில் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் வடிவேல்சுந்தா் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், துணை அமைப்பாளா் தினேஷ்பாபுஆகியோா் முன்னிலை வைத்தனா். இந்தப் போராட்டத்தில் அரசு தங்களது கோரிக்கையை நிறைவேற்றாததை கண்டித்து ஆசிரியா்கள் காதில் பூ வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஒரு சிலா் நெற்றியில் ரூபாய் நோட்டு கட்டிக்கொண்டு, பணம் கொடுத்தால் தான் பதவி கிடைக்குமா? என்ற முழக்கத்தை எழுப்பி எதிா்ப்பை தெரிவித்தனா்.
போராட்டத்தில் ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், திருப்பூா், கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோம். எங்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பணியும் நிறைவடைந்தது. ஆனால், கடந்த 11 ஆண்டுகளாக பணி நியமனம் வழங்கப்படவில்லை. நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அப்போதைய எதிா்க்கட்சித் தலைவராக இருந்த இப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின் எங்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.
திமுக ஆட்சி அமைந்ததும் பணி நியமனம் வழங்குவதாக உறுதி அளித்தாா். அதேபோல திமுகவின்தோ்தல் அறிக்கையில் 177-ஆவதாக எங்களது கோரிக்கை இடம்பெற்றுள்ளது. எனவே எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மறு நியமன போட்டித் தோ்வுக்கான அரசாணை எண் 149 முற்றிலும் நீக்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 4 ஆயிரம் ஆசிரியா்களுக்கு குறைந்தபட்சம் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றனா்.