அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram
சேலம், தொழில்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்தது தொடர்பான விளக்கத்தில், முரண்பாடான பதில் அளித்த தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் தொழில்கல்வி மாணவர்களை, அருகில் உள்ள தொழில் நிலையங்களுக்கு அழைத்து சென்று, பயிற்சி தர நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.இதன்படி கடந்த கல்வியாண்டில், இடைப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, ரூ.1.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதில் முறைகேடு நடத்தியதாக புகார் எழுந்ததையடுத்து, கடந்த மே மாதத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா விசாரணை நடத்தினார்.
அதில் தொழில்கல்வி பயிற்சிக்கு, 84 ஆயிரம், மாணவர்களுக்கு பேப்பர் வாங்கியதாக, 47 ஆயிரம் ரூபாய் என தலைமை ஆசிரியர் பால்ராஜ் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளார். தொழில்கல்வி பயிற்சிக்கு ஒதுக்கியதை, வேறு செலவினத்துக்கு பயன்படுத்தியது தவறு என எழுந்த புகார் மீதான விசாரணையில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 1.32 லட்சத்தையும் தொழில்கல்வி பயிற்சிக்கு செலவிட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இந்தஇரு தகவல்களில் முரண் இருப்பதால், இதற்கு விளக்கம் கேட்டு, சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.