ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில், 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று, 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஊரக வளர்ச்சி துறையில் காலியாக உள்ள பஞ்சாயத்து செயலர் பணியிடங்கள் உட்பட அனைத்து நிலை காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.
பஞ்சாயத்து செயலர்களுக்கு சிறப்பு நிலை, தேர்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உட்பட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் கணினி உதவியாளர், எஸ்.எம்.பி., திட்ட ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும்.
கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது நீக்கம் உள்ளிட்ட அனைத்து வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் உரிய பணியிடங்கள் ஏற்படுத்தி நிரப்ப வேண்டும். பஞ்., செயலர்களுக்கு, 20 சதவீத ஏனையோருக்கு, 10 சதவீத இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்குவதில் இயக்குனர் அலுவலகத்திலும், தலைமை செயலகத்திலும் கடைபிடிக்கப்படும் சிவப்பு நாடாத்தன்மை மற்றும் வீண் கால தாமதங்களை கைவிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும். வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பிற துறை பணிகளை முற்றிலும் கைவிட வலியுறுத்தினர்.
இக்கோரிக்கையை முன்வைத்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று பஞ்சாயத்து செயலர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரையிலான ஊரக வளர்ச்சி துறையினர், 641 பேர் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அனைத்து பி.டி.ஓ., அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இன்றும் போராட்டம் நடத்தவுள்ளனர்.