தமிழ்நாட்டில் அதுவும் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சமூக அக்கறையுடன் பேசிய கருத்துக்கள், இன்றைய காலத்திற்கு சமூகத்தில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இவருடைய சமூக நலன் அக்கறை தான், இன்றைய அமைச்சர்களில் உள்ள ஊழல்வாதிகளை தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு கொண்டு வந்துள்ளார். அப்படி கொண்டு வந்துள்ள அமைச்சர்களின் பட்டியலில் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், ஐ பெரியசாமி, வளர்மதி, பொன்முடி, தங்கம் தென்னரசு இப்படி நீள்கிறது. தமிழ்நாட்டில் இது போன்ற ஊழல் அமைச்சர்கள் சட்டத்தை ஏமாற்றி, தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதற்கு இவர் ஒரு முன் உதாரணம் மட்டுமல்ல,
அந்தத் துணிச்சல் மற்ற நீதிபதிகளுக்கு ஏன் வரவில்லை? இதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வி? அது மட்டுமல்ல, பொதுநல வழக்கு தொடர்ந்தாலே அவர்களுக்கு அபராதம் போடுவதும், டெபாசிட் கட்ட சொல்வதும், இப்படிப்பட்ட நீதிபதிகள் எப்படி சமூக நன்மைக்காக நீதி வழங்குவார்கள்? என்பதே கேள்வியாக உள்ளது. மேலும்,
இவர் சொன்ன உண்மைகள் வருங்கால இளைய தலைமுறைகள், இக்காலத்தில் வாழ்கின்ற பொதுமக்கள் மிகவும் சிந்தித்து அதன் உண்மை நிலையை அறிய வேண்டும். அதாவது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ,அந்த காலத்தில் தவறு செய்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள் .அது 100% உண்மை. இப்போது தவறு செய்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். நல்லவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்த வித்தியாசம் தான் சமூகத்தில் அதிகரிக்கிறது.
அதற்கு என்ன காரணம் ? அரசியல் கட்சிகள் தான், இந்த இடைவெளியை அதிகப்படுத்துகிறது. இன்று அரசியலில் கிரிமினல்ஸ், மோசடி பேர்வழிகள், ஏமாற்று பேர்வழிகள் ,எப்படியும் பேசுபவர்கள், ஒழுக்கமற்றவர்கள், குடிகாரர்கள், போலித்தனமான அரசியல்வாதிகள், சுயநலவாதிகள் ,அரசியல் வியாபாரிகள் ,இவர்கள் எல்லாம் ஆக்கிரமித்து இருக்கிற ஒரே இடம், இன்றைய அரசியல்.
இது அரசியல் தெரியாதவர்களிடம் இவர்கள் பந்தா காட்டிக் கொண்டு, சமூகத்தில் நல்லவர்கள் வேஷத்தில் நடித்துக் கொண்டு, அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், அரசியல் தெரிந்தவர்கள் இவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. இங்கே அரசியல் தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் இடையே வித்தியாசம் அதிகமாக இருப்பதால்தான் இந்த நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளில் படித்தவர்களும், படிக்காதவர்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பதும் ,பேசுவதும் மனித வாழ்க்கையின் கேவலமான செயல்களில் அதுவும் ஒன்று.
தவிர ,அரசியல் என்பது கூட்டம் கூடுவதும், அடியாட்கள் வேலை பார்ப்பதும், சட்டப்படி கொள்ளை அடிப்பதும், பொது சொத்துக்களை பங்கு போட்டுக் கொள்வதும் ,பதவி ,அதிகாரம் அதற்காகத்தான் என்று நினைத்துக் கொண்டிருப்பதும், இன்றைய அரசியலின் எழுதாத சட்டமாக நினைத்துக் கொண்டிருக்கும் சுயநல வாதிகளின் அரசியல் கொள்கைகள். கொள்கைக்காக வந்தவர்கள் ஒரு சதவீதமாக வந்து தேர்வார்களா ? என்பது சந்தேகம். ஆனால், கொள்ளையடிப்பதற்காக வந்தவர்கள் தான் இன்றைய அரசியல் கட்சியினர். அதனால், வருங்கால இளைய தலைமுறைகள், உழைப்பவர்கள் ,அரசியல் தெரியாதவர்கள், இவர்கள் அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிற ஒரே கூட்டம் அரசியல் கட்சியினர்.இது பற்றி எத்தனையோ முறை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் எழுதி இருக்கிறேன்.
இந்த விஷயத்தை தான் ,நாம் எப்படிப்பட்ட காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ? என்பதை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெளிவுபடுத்தி இருக்கிறார் .அதாவது நாம் யாரை வரவேற்க வேண்டும் ? யாருக்கு மரியாதை தர வேண்டும் ? யாரைத் தேர்வு செய்ய வேண்டும் ? இதைதான் தெளிவுபடுத்துகிறார். ஒழுக்கம் என்பது மனித வாழ்க்கையின் ஓர் அங்கம். அரசியலில் ஒழுக்கம் என்பது என்ன ? என்று கேட்பவர்கள், அடியாட்கள் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் கொள்கை முடிவோ அல்லது சமூக நலனோ எதிர்பார்க்க முடியுமா?
அதனால் தான், ஒரு பகுதியில் அல்லது ஒரு கிராமத்தில், ஒரு நகரத்தில் சமூக நலன் சார்ந்தவர்கள், நேர்மையானவர்களுக்கும் ,நெறியாளர்களுக்கும், மக்கள் ஆதரவு தருவதில்லை. பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், தேர்வு செய்கிறோம். பணத்திற்காக யாரை வேண்டுமானாலும், இன்றைய பல பத்திரிகைகள் புகழ்ந்து கொண்டிருக்கிறது. பணத்திற்காக தகுதியற்றவர்களை, தகுதியானவர்கள் என்று வாக்களிக்கிறோம்.
.jpg)
ஆனால், ஒரு நல்லவரை நாம் தேர்வு செய்ய, நம் கடமையிலிருந்து தவறி கட்சி என்ற கூட்டத்தை தான் நாம் பார்க்கிறோம். அவருக்கு சமூகத்தில், அவரை நீதிபதி சொன்னது போல ,ஐயோ பாவம் நல்லவரு, பொழைக்கத் தெரியாதவர். ஆகக் கூடிய அவர் ஊரை அடித்து உலையில் போடும் கூட்டத்திற்கு நல்லவனாக வாழ்வதே பிடிக்கவில்லை. அவர்களுக்கு எப்படியும் வாழ்வது, தன்னை தானே பெரிய ஆள் என்று நினைத்துக் கொண்டு, மக்களிடம் பந்தா காட்டி அரசியல் பிழைப்பு நடத்துவது, கௌரவமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, இவர்களைப் போல் மக்களை ஏமாற்றி அரசியல் செய்து ஊர் சொத்துக்களை அபகரிப்பது திறமையாக நினைக்கிறார்கள். அதாவது, ஒரு திருடன் அல்லது கொள்ளையடிப்பவன் கூட தன்னுடைய உழைப்பாலும், திறமையாலும் இதை திருடினேன் என்று சொன்னால், மக்கள் அதை ஏற்றுக் கொள்வார்களா? ஆனால், ஒருவன் பதவி அதிகாரத்தில் உட்கார்ந்து கொண்டு, நான் சட்டப்படி அதை திருடிஇருக்கிறேன் அல்லது கொள்ளையடித்து இருக்கிறேன் என்றால் ஏற்றுக் கொள்வார்கள், என்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது எவ்வளவு பெரிய தவறு? மக்கள் ஒரு பொறுப்பை கொடுக்கிறார்கள் .அந்த பொறுப்பிற்கு இவர்களுக்கு தகுதி இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது கூட அவர்களுக்கே அது தெரியாது. அதேபோல், இந்த பொறுப்பை கொடுத்த மக்களுக்கும், இவர் அந்த பொறுப்புக்கும், பதவிக்கும் தகுதியானவரா? என்பதும் தெரியாது. இந்த இரண்டுக்கும் இடையில் தான் ,இப்படிப்பட்ட பிரச்சனைகள், தவறுகள், ஊழல்கள், சட்டம் ஒழுங்கு இவை எல்லாம் ஏற்படுகிறது.
மேலும், நேர்மையாகவும், மக்களுக்கான சமூகப் பணியை ஒருவர் செய்யும்போது, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் சொன்னது போல பிழைக்கத் தெரியாதவன் என்ற ஒரு நக்கலான பேச்சும் ,இன்றைய சமூகத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அது முற்றிலும் தவறு. நாம் மதிக்கக் கூடியவர்களையும், சமூகத்திற்கு நன்மை செய்யக்கூடியவர்களையும், இந்த மக்கள் உதாசீனப்படுத்துகிறார்கள். அதனுடைய விளைவு என்று அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .அது எதனால் வந்தது? கூட தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஏன் வருகிறது? என்று கூட தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்? அந்த அளவுக்கு மக்கள் செய்த தவறு, இன்றைய காலகட்டத்தின் அரசியல் . மக்கள் அனுபவிக்க வேண்டிய கர்ம வினை தகுதியற்றவர்கள், இவர்களை ஆண்டு கொண்டு இருக்கிறார்கள். இது பற்றி சில ஆன்மீகவாதிகளிடம் கேட்டபோது, மாற்றங்கள் வரும். ஆனால் ,அந்த மாற்றம் வரும் போது, இவர்கள் அரசியலில் இருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.
எத்தனையோ பத்திரிகைகள் தமிழ்நாட்டில் இருக்கிறது .ஆனால், அந்த பத்திரிகைகளில் வெளிவராத சமூக நலன் சார்ந்த எத்தனையோ செய்திகள் மக்கள அதிகாரம் வெளியிட்டு இருக்கிறது. அதை அலட்சியமாக சில அதிகாரிகள் பார்த்திருக்கிறார்கள். சமூகத்திற்கான நன்மை ,எந்த பத்திரிக்கை என்பதை சுட்டிக்காட்டியும், மக்கள் அதிகாரம் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. அதற்கான முக்கியத்துவம் அரசாங்கம் தரவில்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கிறேன்.
இந்த பத்திரிகைகளை எல்லாம் அலட்சியமாகவும், நக்கலாகவும் பேசுகின்ற கார்ப்பரேட் நிறுவன செய்தியாளர்கள் ஒரு பக்கம், மற்றொரு பக்கம் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம் சமூகத்தில் சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான ஒரு மறைமுக போராட்டத்தை வளர்த்திருக்கிறார்கள். அதுதான் உண்மை. இந்த உண்மைக்கும் ,பொய்க்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இன்றைய அரசியல்.

இந்த பத்திரிக்கை சமூகத்தில் இருக்கும் அவலங்களை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் தான் இதை சரி செய்யும் முடியும் என்று நம்புகிறேன். ஏனென்றால் யாருக்கு அரசாங்கம் சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்காமல் இது நாள் வரை தடுத்தது அரசியல். அரசியலுக்குள் பத்திரிக்கை இருந்தால், மக்களுக்கு சொல்ல வேண்டிய உண்மைகளை மறைக்க வேண்டி இருக்கிறது .அரசியலுக்கு வெளியில் பத்திரிக்கை இருந்தால் சொல்ல வேண்டிய உண்மைகளை மக்களிடம் சொல்ல முடிகிறது.
ஆனால், அரசாங்கம் இதைக் கொள்கை முடிவு என்கிறது/ இது எப்படி கொள்கை முடிவாகும்? பத்திரிகையின் சுதந்திரமா? அல்லது அதிகாரத்தின் கொள்கை முடிவா? இதற்கு அர்த்தம் தெரியாமல் செய்தித் துறை இருக்கிறது என்பது மிகவும் வேதனையான ஒன்று. இந்த செய்திகள், கருத்துக்கள், எல்லாம் பத்திரிக்கை துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி, சமூக நன்மைக்கான ஒரு அடித்தளத்தை கொண்டு வர வேண்டும் என்பதுதான் சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.
அதேபோல், நீதிமன்றத்திற்குள் அரசியல் வரக்கூடாது. அரசியல் வந்தால் நீதித்துறையின் தரம் தாழ்ந்து விடும். அப்போது சாமானியர்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகும் என்பது உறுதி. மேலும், இது போன்ற சமூக நலனில் அக்கறை உள்ள நீதிபதிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள்.