மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.
அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் அனுபவித்து ஆக வேண்டும். அப்படி தான் முன்னால், இந்நாள் மந்திரிகள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் .எனக்கு தெரிந்த முன்னால் ஒரு மந்திரி திருப்பதிக்கு அடிக்கடி சென்று பதவி பெற்றார்.
அதே பதவியில் அவர் செய்த தவறுகளுக்கு திருப்பதி ஏழுமலையானுக்கு உண்டியல் காணிக்கையும் செலுத்தி பார்த்தார். அவருக்கு தெரியாது கடவுள் லஞ்சம் வாங்க மாட்டார். ஆனால் சமீபத்தில் அவர் மீது ஊழல் புகார் நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாக வெளிவந்துள்ளது. இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள். கடவுள் எப்படிப்பட்டவர் ?
மேலும் ,ஆடம்பரத்திற்கும், பணத்திற்கும், பதவிக்கும் ,அதிகாரத்திற்கும், அப்பாற்பட்டவர். அவருக்கு நிகர் அவரே. இந்த உலகில் வேறு ஒருவரும் இல்லை.ஆனால், நாட்டில் போலி சாமியார்கள், போலி பாதிரியார்கள், போலி முல்லாக்கள், இவர்கள் எல்லாம் கடவுளை நம்புவதில்லை. அதனால்தான் மக்களுக்கு இந்த அரசியல் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் .அந்த அரசியல் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். என்று அரசியல் கட்சிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
இவர்களுடைய வேலை கடவுளைத் தவிர, வேறு எதையும் நினைக்கக் கூடாது. அதே சிந்தனையில் இருக்க வேண்டும். இறைவனை அடைவது மட்டுமே தனது லட்சியமாக இருக்க வேண்டிய சாமியார்கள், ஆசைகளை துறக்காமல் பணத்தை எந்த வழியில் சம்பாதிக்கலாம் ? எந்த வழியில் மக்களை ஈர்க்கலாம் ? எந்த வழியில் ஆட்சியாளர்களை தன் வசப்படுத்தி காரியம் சாதிக்கலாம் ? இப்படிப்பட்டவர்கள் யாரும் கடவுளை எளிதில் அடைய முடியாது.
கடவுளை அடைபவர்கள் எளிமையான வாழ்க்கையில் இன்று ஒரு வேலை உணவு கிடைத்தாலும், கிடைக்கவில்லை என்றாலும், இறைவனிடமே சரணாகதி அடைந்த வாழ்க்கை ,தனக்கு எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும், அந்த இறைவனைத் தவிர, எனக்கு வேறு ஒன்றும் பெரிதல்ல என்று யார் ஒருவர் இறைவனே கதி என்று வாழ்கிறார்களோ, அவர்கள்தான் உண்மையான ஞானி. இறைவனை அடைய தகுதியானவர்கள்.
தெய்வம் எந்த ரூபத்திலும் வரும். தெய்வம் எந்த ரூபத்திலும் பேசும். தெய்வம் கனவிலும் பேசும் .அது உருவத்திலும் இருக்கும். உருவம் இல்லாமலும் இருக்கும் இதுதான் கடவுள். கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது, கடவுளை மட்டும் கண்டால் கல்லும் தெரியாது. இங்கே கோயிலுக்கு செல்பவர்கள் கடவுளின் சிலை என்று வழிபடுபவர்கள் பலர், அதுவே கடவுள் என்று நினைத்து வழிபடுபவர்கள் பலர்.
எல்லாவற்றிக்கும் யார், யார் எப்படி வழிபடுகிறார்களோ, அப்படி இறைவன் அவர்களை பார்த்துக் கொண்டு அருள் பாலிப்பார். ஒருவனுக்கு சகல வசதிகளையும் கொடுத்து துக்கப்பட வைப்பார். ஒருவனுக்கு சகல துன்பங்களையும், கொடுத்து இன்பத்தில் வைப்பார். இன்பமும், துன்பமும் இறைவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. சந்தோஷமும் ,துக்கமும் கொடுப்பது இந்த உலகத்தில் ஞானத்தை பெறுவதற்கே, அந்த ஆத்ம ஞானத்தை அடைந்தவன் பாக்கியசாலி. அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டார்கள் .
இறைவன் அவர்கள் உள்ளத்திலே வாசம் செய்து கொண்டிருப்பார். இறைவன் அவர்களை நினைப்பார். அவர்களும் இறைவனை நினைப்பார். அது இருவருக்கும் உள்ள ஆத்ம பந்தம். இதுதான் மனிதன் தெய்வமாகும் சூட்சமம். ஆனால், அவ்வளவு எளிதில் உங்களை அங்கே நெருங்க விடாது. காரணம் அவரவர் நல்வினை, தீவினைக்கு ஏற்ப நல்லது கெட்டதாக தெரியும். கெட்டது நல்லதாக தெரியும். சொன்னாலும் புரியாது. ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு தேவை எதுவோ, அதுதான் பசியின் கொடுமையில் இருப்பவர்களுக்கு சோறு கிடைத்தால் சொர்க்கம். இதுதான் வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .
ஆனால், அவர்களுடைய உயிர் ஊசலாடும்போது, அல்லது நோய்வாய்ப்படும் போது, அப்போதுதான் நினைத்துப் பார்ப்பார்கள். சிலர் அதையும் பார்ப்பதில்லை. ஐயோ குய்யோ என்று கத்தி உயிரை விடுவார்கள். யார் ஒருவர் இறைவன் நாமத்தை சொல்லி உயிர் விடுகிறார்களோ அவர்களே இறைவனை சென்றடைய முடியும். அது இறைவனை சரணாகதி அடைந்து இறைவனே கதி என்று இருப்பவர்களுக்கு மட்டும்தான் அப்போது இறைவன் நாமும் சொல்லி இந்த ஆத்மா பிரியும். மேலும்,
இறைவன் மிகப்பெரியவன். அவனுக்கு நிகர் அவனே. அவனை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. அவனை யாராலும் லஞ்சம் கொடுத்து திருப்தி செய்ய முடியாது. அன்பால் இறைவனை நேசித்தால் ,அவனே கதி என்று வாழ்ந்தால் ,அவர்கள் மட்டும்தான் இப்பிறவியின் கர்மாவை குறைத்துக் கொண்டு, நற்கதி அடைய முடியும். இங்கு சாமியார் வேஷம் போட்டாலும், அல்லது நல்லவர்கள் வேஷம் போட்டாலும், கடவுளை ஏமாற்ற முடியாது.. அவர்கள் தான் ஏமாந்து போவார்கள் என்பது உறுதி.