நவம்பர் 11, 2024 • Makkal Adhikaram
சேலம் மாவட்டம், ஆத்துார், அரசநத்தத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், மஞ்சினி மருதாம்பாள், தென்னங்குடிபாளையம் சுந்தரம் உள்ளிட்டோர், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 4ம் தேதி நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கை குறித்து மனுக்கள் அளித்தனர்.
இது தொடர்பாக விசாரிக்க ஆத்துார் ஒன்றிய பி.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.மனுக்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் பஸ் ஸ்டாண்டில் நேற்று முன்தினம் கிடந்ததாக சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. சேலம் மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தியது.மனுக்களை கவனக்குறைவாக கையாண்டதாக, சம்பந்தப்பட்ட துணை பி.டி.ஓ., மோகன்ராஜை, ‘சஸ்பெண்ட்’ செய்து, கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கவும், பி.டி.ஓ., பரமசிவத்துக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கலெக்டருக்கு அனுப்பிய அறிக்கையில் பி.டி.ஓ., பரமசிவம் கூறியிருப்பதாவது: கலெக்டர்அலுவலகத்தில் மனுக்களை பெற்ற சம்பந்தப்பட்ட துணை பி.டி.ஓ., சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் தனியார் பஸ்சில் ஆத்துார் சென்றுள்ளார்.
அப்போது மனுக்கள் வைத்திருந்த கைப்பையை தவற விட்டுள்ளார். டிரைவர் வீராசாமி, அதில் இருந்த மொபைல் எண்களை தொடர்பு கொண்டு பேசி, மனுக்களை அனுப்பி வைத்துள்ளார்.மனுக்கள் குப்பை தொட்டியில் இருந்து எடுக்கப்படவில்லை. பணிச்சுமையாலும், தாரமங்கலம் வட்டாரத்துக்கு மோகன்ராஜ் இடமாறுதல் செய்யப்பட்டதாலும், மேற்கண்ட தவறை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.