அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 17 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அதிலும் நாளை (அக்டோபர் 15) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், வடதமிழக மாவட்டங்களான இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கனமழை முன்னெச்சரிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 15 மண்டலங்களை கண்காணிக்க 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சம்மந்தப்பட்ட மண்டலங்களை சேர்ந்தவர்கள், பருவமழையால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உதவியை பெறலாம். அவர்களின் மொபைல் போன் மட்டுமின்றி, தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மண்டலத்துக்கு சமீரன் ஐஏஎஸ், மணலிக்கு குமரவேல் பாண்டியன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாதவரத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி மேகநாத ரெட்டி, தண்டையார்பேட்டைக்கு ஆர் கண்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அம்பத்தூர் பகுதிக்கு எஸ். ராமன், அண்ணாநகர் பகுதிக்கு ஸ்ரேயா பி சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல, ஜான் வர்கீஸ், கணேசன், பிரதாப், விசாகன், சிவஞானம், பிரபாகர், செந்தில் ராஜ், மகேஸ்வரி ரவிகுமார் மற்றும் உமா மகேஸ்வரி ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள், மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், 5 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் 3 குழுக்களை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பணிகளை ஒருங்கிணைக்க கட்டா ரவிதேஜா, கே.ஜெ.பிரவீன், அமித் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மண்டலக் கண்காணிப்பு அலுவலர், மண்டல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி இயக்குநர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.