செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram
போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட அருப்புக்கோட்டை பெண் காவல் துணைக் கண்காணிப்பாளர் காயத்ரி திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 35) (டிரைவர்). இவர் சமீபத்தில் வாகனத்தில் திருச்சுழி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சுழி – ராமேஸ்வரம் சாலையில் கேத்த நாயக்கன்பட்டி விளக்கு அருகே காளிகுமார் சென்றபோது, 2 பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென காளிகுமாரை வழிமறித்து ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியது.
இதில் பலத்த காயம் அடைந்த காளிகுமார் கீழே விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே காளிகுமார் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையும் நடத்தப்பட்டது. இதனிடையே ஆத்திரமடைந்த காளிகுமாரின் உறவினர்கள் மற்றும் சக ஓட்டுநர்கள், மருத்துவமனை முன்பு திரண்டு வந்து கொலையாளியை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். திருச்சுழி அருப்புக்கோட்டை சாலையில் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மறியல் பகுதிக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் டிஎஸ்பி காயத்ரியை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனவே, அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்த டிஎஸ்பி காயத்ரி முயன்றார். அப்போது திடீரென பெண் டிஎஸ்பி காயத்ரியை அந்த வாலிபர் தாக்க தொடங்கினார்.. இதனால் அதிர்ச்சியடைந்த சக போலீசார் அந்த இளைஞரை சுற்றி வளைத்தனர்.
ஆனால் அதற்குள் போராட்டக்காரர்கள் பெண் டிஎஸ்பி காயத்ரி மற்றும் மற்ற போலீசாரை தாக்கினர். சிலர் டிஎஸ்பி காயத்ரியின் முடியை இழுத்து சரமாரியாக தாக்கினர். இதனால் அந்த இடம் பதற்றமாக மாறியது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியானதையடுத்து, டிஎஸ்பிஐ தாக்கியதாகக் கூறப்படும் ராமநாதபுரம் அருகே நெல்லிக்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் (43) என்பவரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல் பொன்குமார், காளிமுத்து, சஞ்சய்குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே முடியை இழுத்து தாக்கிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை புதிய துணை டிஎஸ்பி மதிவாணன் நேற்று பொறுப்பேற்றார்.டிஎஸ்பி காயத்ரியின் திடீர் பணிமாற்றம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘டிஎஸ்பி காயத்ரி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதாவது, கட்சி பேரணியின் போது அவருக்கு சரியான அணுகுமுறை இல்லை என சிலர் குற்றம்சாட்டினர். இதனிடையே அருப்புக்கோட்டையில் உள்ள காவல் நிலையங்களில் பெண் அதிகாரிகள் அதிக அளவில் உள்ளனர். அதனால் இந்த காரணங்களால் காயத்ரி இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகுதான் அவர் தாக்கப்பட்டுள்ளார். அதனால் அந்த சம்பவத்துக்கும் காயத்ரி இடமாற்றத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என்றனர்.