ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram
பரமத்தி வேலூர் டவுன் பஞ்சாயத்தில், சில மாதங்களுக்கு முன் நடந்த மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மக்கள் திட்டப்பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டதால், கவுன்சிலர்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் நடந்த மன்ற கூட்டத்தில், 18 வார்டுகளிலும் கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி, பைப் லைன் பணிகள் செய்ய, தலா ஒவ்வொரு வார்டுக்கும், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்கள் கொண்டு வந்து மக்கள் மன்றத்தில் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.அதேபோல், ஐந்து மாதத்துக்கு முன் நடந்த மன்ற கூட்டத்தில், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ப.வேலுார் காசி விஸ்வநாதர் கோவில் அருகே இறந்தவர்களுக்கு காரியம் செய்யும் இடத்தில், மேற்கூரை புதிதாக கட்ட வேண்டும். இலவச கழிப்பிடம் புதிதாக கட்ட தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.
இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், இளநிலை பொறியாளராக பணியாற்றும் வீரமணி, கடந்த ஜூன் மாதம் நடந்த மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட, மேற்கண்ட டெண்டர் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு செய்து வழங்க வேண்டும். திட்ட மதிப்பீடு செய்தால் மட்டுமே பணி செய்ய முடியும். ஆனால், அவர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து முழுவதுமே மக்கள் அத்தியாவசியமான தேவைகளுக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்களும், கவுன்சிலர்களும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து, இளநிலை பொறியாளர் வீரமணியிடம் கேட்டபோது, ”நிறைவேற்றப்பட்ட டெண்டர் தீர்மானங்களுக்கு, திட்ட மதிப்பீடு செய்ய செயல் அலுவலர் ஒப்புதல் கடிதம் வழங்கவில்லை. ஒப்புதல் கடிதம் தந்தால் மட்டுமே திட்ட மதிப்பீடு செய்ய முடியும்,” என்றார்.இதுகுறித்து, கவுன்சிலர்கள் கூறியதாவது:மன்ற கூட்டத்தில், கடந்த ஜூன் மாதத்தில், 18 வார்டுகளிலும் கான்கிரீட் சாலை, சாக்கடை வசதி, பைப் லைன் பணிகள் அமைக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ப.வேலுார் டவுன் பஞ்., செயல் அலுவலர் சோமசுந்தரம், கவுன்சிலர்களை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
வார்டுகளில் உள்ள குறைகளை செயல் அலுவலர் சோமசுந்தரத்திடம் தெரிவித்தால், குறைகள் குறித்து என்னிடம் பேச வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். மன்ற கூட்டத்தில் கலந்துகொண்டு கையெழுத்து மட்டும் போட்டுச்செல்லுங்கள் என எடுத்தெறிந்து பேசுகிறார்.