ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram
பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா, 38; மகளிர் குழு தலைவி. இவர், மைக்ரோ பைனான்சில் மகளிர் குழுவுக்கு கடன் வாங்கியுள்ளார். குழுவில் உள்ள சில உறுப்பினர்கள், மாத தவணையை முறையாக செலுத்தவில்லை.இதனால், அவர்களது தவணை தொகையையும் சேர்த்து, சுஜாதா கட்டி வந்துள்ளார். இதற்காக, வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் தவித்த சுஜாதா, மகளிர் குழுவுக்கும், வெளியில் வட்டிக்கு வாங்கிய பணத்தையும் செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதனால், மைக்ரோ பைனான்ஸ் பணியாளர்கள், பணத்தை கட்டச்சொல்லி சுஜாதாவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரிடமும், வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். இவரும், சுஜாதாவை கடுமையாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுஜாதா, கடந்த, 21ல், மூன்று நிமிடத்திற்கு வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப்பாளையம் போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக கவிதா மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தனர்.
ஆனால், கவிதாவை இன்னும் கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுஜாதாவின் உறவினர்கள் மற்றும் இ.கம்யூ., கட்சியினர், நேற்று, சுஜாதா தற்கொலைக்கு காரணமான அனைவர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்யக்கோரி, பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், சுஜாதா தற்கொலைக்கு முன், வீடியோவில் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளார்.
அதனடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். சுஜாதா குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இதுகுறித்து விசாரிக்க, தனி குழு அமைக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.