
சேலம் மாவட்டம், தாரமங்கலத்தை சேர்ந்த செஞ்சிறகுகள் என்ற தொண்டு அமைப்பின் தலைவர் தினேஷ், 30, என்பவர், ‘சுடுகாட்டை காணவில்லை’ எனும் பேனரை இரு கைகளால் பிடித்தபடி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி, பேனரை பறிமுதல் செய்து, அவரை கலெக்டரிடம் புகார் அளிக்க அனுப்பினர்.
பின், அவர் கூறியதாவது: தாரமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட, 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, அங்குள்ள மயானத்தில் கொட்டப்படுகிறது. மயானத்தின் ஒரு பகுதியில், குப்பையை மறுசுழற்சி செய்யும் கூடம் அமைக்கப்படும் என கூறி, ஒன்பது மாதங்களாக கொட்டப்படும் குப்பை, மலை போல குவிந்துள்ளதால் மயானம் மறைந்து விட்டது.

மயானத்தை சுற்றியுள்ள, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், குப்பை துர்நாற்றத்தால் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். அத்துடன் கொசு உற்பத்தி அதிகமாகி, நோய் தொற்று பாதிப்புடன், புழு, பூச்சி தொல்லைகளாலும் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் பாதிப்பு அதிகமாகி விடுகிறது.
இதுபற்றி ஊர்மக்கள் சார்பில், பலமுறை மனு கொடுத்தும் நகராட்சி தரப்பில் நடவடிக்கை இல்லை. இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்யவும், சடலத்தை அடக்கம் செய்யவும் முடியாத அவலம் உள்ளது. எனவே, மயானத்தை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.