விவசாயிகள் கஷ்டமும், வேதனையும் தெரியாமல் அரசியல் கட்சியினரும், ஆட்சியாளர்களும் இருந்துவருகிறார்கள். மேலும், விவசாயி சேற்றில் இறங்கி வேலை செய்தால் தான், எல்லோருக்கும் உணவு. அதை எல்லாம் பேச்சிலும், எழுத்திலும் தான் இருக்கிறதே ஒழிய, நடைமுறையில் இல்லை என்பதுதான் மிகப்பெரிய வேதனை.
ஒவ்வொரு விவசாய குடும்பமும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உற்பத்தி செய்கிறார்கள் என்பதை நேரடியாக பார்த்தால் தான் அந்த உண்மை புரியும் .அது தவிர ,எந்த ஒரு விவசாயியும் தான் பயிர் செய்த நெல், கரும்பு, சோளம், காய்கறிகள், பழ வகைகள், பூக்கள் எதுவானாலும் அது நல்ல விளைச்சல் வந்து லாபம் கண்டால் தான் ,எந்த ஒரு விவசாயிக்கும் ஒரு மகிழ்ச்சி.
ஆனால், எத்தனையோ இடர்பாடுகள், இயற்கையின் இடர்பாடுகள், பூச்சிகள், பண கஷ்டங்கள், கடன் சுமை இதற்கிடையில் விவசாயம் செய்து விளைய வைத்த பொருளை இடைத்தரகர்கள் என்ற வியாபாரிகள் லாபம் காணுகிறார்கள். இன்னொரு பக்கம் அரசாங்கம் அவர்களுக்கு இது போன்ற தவறான அணுகுமுறை மற்றும் வயிற்று எரிச்சல் சும்மா விடுமா?
பொங்கல் தொகுப்புக்கு கரும்பு விவசாயிகளிடம் முன்பணம் கொடுத்துவிட்டு, அந்த கரும்பில் ஒரு சில குறைகள் இருந்தால், அதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் .ஏனென்றால், எல்லா கரும்பும் ஒரே மாதிரி இருக்காது. மனிதரில் எவ்வளவு வேறுபாடு இருக்கிறதோ, அதே வேறுபாடு இந்த விளைந்த எந்த பெயரிலும் அது இருக்கத்தான் செய்யும்.
ஆனால், அதை தட்டிக் கழித்து, அவர்கள் வேதனையை, மனக் குமுறலை மக்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள். அதனை சரி செய்து ,அவர்களுடைய உழைப்புக்கு அரசு அதிகாரிகள் அல்லது இடைத்தரகர்கள் மரியாதை கொடுத்து அந்த கரும்பை கொள்முதல் செய்தால் தான், அந்த விவசாயிகள் மனம் குளிரும் .
இல்லையென்றால், அவர்களுடைய வயிற்றெரிச்சல் சும்மா விடாது. எனவே அந்த வேதனையின் வெளிப்பாடாகத்தான் அவர்கள் தங்கள் கருத்துக்களை இந்த கரும்பு விவசாயிகள் பதிவு செய்திருக்கிறார்கள். எந்த பகுதியில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டுள்ளதோ, அதற்குவேளாண் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, சரி செய்ய வேண்டியது அவர்களுடைய முக்கிய கடமை.