சித்தர்களின் பெருமைகள்.
சித்தர்கள் இந்த உலகத்தை வழிநடத்தக் கூடியவர்கள் அவர்களுடைய அருள் இல்லாமல் அவர்களைப் பார்க்கவும் முடியாது. அவர்கள் மனது வைத்தால் தான் பார்ப்பார்கள் அப்படிப்பட்ட சித்தர்கள் யார்?

சித்தத்தை சிவய (சிவன்) பால் வைத்தவர்களே சித்தர்கள் ஆவார்கள் . அவர்கள் சிவனுடன் இரண்டறக் கலந்தவர்கள் . அஷ்டமா சக்தி(சித்தி) களை (எட்டு மஹா சக்திகளை) பிரயோகிக்க வல்லவர்கள் . அண்டத்தில் எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், ஊடுருவிச் செல்லும் மிகுந்த வல்லமை பெற்றவர்கள் .
ஜீவராசிகளிடத்தில் பேதமை அற்றவர்கள் . தன்னலம் இல்லாதவர்கள். தர்மம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்கும் போதனை செய்து , உண்மை நிலைக்கு உயர உதவுபவர்கள் . அண்டத்தின் இயக்க ரகசியங்களையும், பிண்டத்தின் இயக்க ரகசியங்களையும் நமக்கு எடுத்துரைப்பவர்கள் . ஒவ்வொரு செயலுக்கான விளைவுகளையும் மிகவும் துல்லியமாக எடுத்துரைப்பவர்கள் . முக்காலத்தையும் உணர்ந்தவர்கள் . “சித்தர்” என்பது ஒரு பெயரோ அல்லது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொள்ளப்படும் புனைபெயரோ அல்ல . அது ஒரு உண்மையுடன் கலந்த பரிபூரண நிலை யாகும் .
நமசிவய என்ற ஐந்து எழுத்து (பஞ்ச + அக்ஷரம் = பஞ்சாக்ஷரம்) எவ்வாறு அண்டத்தை படைத்து, காத்து, அழித்து, அருளி இயக்குகிறது ? அது தன்னுள் கொண்டிருக்கும் அ உ ம ( ஓம்) என்ற பிரணவத்துடன் சேரும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றது? “நமசிவய” தனக்குள் ஒன்றை ஒன்று மாறி, மாறி சேரும்போது என்னென்ன விளைவுகள் ஏற்படுகிறது? என்பது அனைத்தையும் கூறும் வல்லமை பெற்றவர்கள் .
நமது உடலுக்குள், மூலாதார நிலையில் சுருண்டு கிடக்கும் பாம்பானது நமக்கு ஏற்படுத்தும் இன்னல்களையும், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் யுக்திகளையும், எளிமையாக கூறி நம்மை காப்பவர்கள் . “சித்தர் பெருமார்கள்” அனைத்து ரகசியங்களையும் , நமக்காக எடுத்துரைத்தாலும் அவர்களை, அவர்களே வணங்கச் சொல்லும் விதமான குறிப்புகள் எங்கும் எதிலும் காணப்படவில்லை. போற்றுதலுக்குரிய சிவய த்தையே வணங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஆணையிடுகிறார்கள். ஏனெனில் சிவய த்தை தவிர நம்மை காக்கக்கூடிய பொருள் அண்டத்திலேயே இல்லை என்று அருதியிட்டுக் கூறுகிறார்கள். இவ்வாறான இறைநிலை ஈசர்களை தினந்தோறும் நாம் வணங்கி வருவதால் நமக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும், உண்மையான சந்தோஷங்களையும் தன்மயமாய் நம்மிடத்தில் வந்து அடைய பெரும் கருணை செய்கிறார்கள்.
சித்தர் பெருமார்களை வணங்குவது தொடரும்………!
சந்த் மஹாசபா , மாநிலத் தலைவர் – ஸ்ரீராம் சுவாமி ஜி.