
தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினம்தோறும் பலர் தங்கள் பத்திரங்களை பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் வாங்குவது உள்ளிட்ட பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.அதேசமயம், தொடர்ச்சியாக சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துவண்ணம் உள்ளன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று தீடிரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், அச்சரப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொண்டது.அதேபோல், அவிநாசி, மரக்காணம், திருச்செங்கோடு, அரக்கோணம் உள்ளிட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
இந்தச் சோதனையில் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.