நாமக்கல் அருகே பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் பலி உடலை வாங்க பெற்றோர் மறுப்பு .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram

 நாமக்கல் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் பிளஸ் 1 படித்த மாணவர் உயிரிழந்தார். இச் சம்பவத்திற்கு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மேலும்,நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் இரு மாணவர்களுக்கு இடையே நேற்று மாலை கடுமையான மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் மாறி, மாறி தாக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவத்தில் ஒரு மாணவர் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த நிலையில், சக மாணவர்கள், ஆசிரியர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அந்த மாணவன் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த மோதல் சம்பவத்தில் உயிரிழந்த மாணவன் லாரி டிரைவரான ரமேஷ் என்பவரின் மகன் ஆகாஷ் என்பதும், அவர் அருகில் உள்ள நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பும்போது, வகுப்பறை வாசல் ஓரத்தில் விட்டிருந்த ஆகாஷின் செருப்பை காணாததால், கோபமடைந்த அவர், தனது செருப்பை எடுத்து ஒளித்து வைத்தது யார்? என அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டு திட்டியுள்ளார். அப்போது மற்றொரு மாணவனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.

ஒருகட்டத்தில் மயங்கி விழுந்த ஆகாஷ், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். மரணமடைந்த ஆகாஷின் உடல் உடற்கூராய்வுக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஆகாஷுடன் சண்டை போட்ட மாணவனை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ஆசிரியர்கள், மாணவர்களிடம் மாவட்டக் கல்வி அலுவலர் விஜயன் விசாரணை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், பலியான மாணவனின் பெற்றோர் கொந்தளித்துப் போய் உள்ளனர். வலிப்பு வந்து ஆகாஷ் மயங்கி விழுந்ததாக கூறினார்கள், நாங்கள் எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றபோது, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக கூறினார்கள். அங்கு சென்று பார்த்தபோது எங்கள் மகன் உயிருடன் இல்லை. எங்கள் மகன் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பலியான ஆகாஷின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தங்கள் மகனின் உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி வருகின்றனர். தங்கள் மகன் உயிரிழந்ததற்கு, வகுப்பறையில் ஆசிரியர்கள் இல்லாததே காரணம் என்றும், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

இது தொடர்பாக பலியான மாணவனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணைக்குப் பிறகு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, உடலை பெறும்படி டிஎஸ்பி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *