நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், உழவர் சந்தை, பூங்கா சாலை, கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் கடைகள் அமைத்து காய்கறி, பழங்களை வியாபாரிகள் சிலர் விற்பனை செய்து வந்தனர்.
மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி உத்தரவுப்படி, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. இதனால், தங்களுக்கு கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, சாலையோர வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, உழவர் சந்தையிலிருந்து, 100 மீட்டர் தொலைவில், அம்மா உணவகம் அருகே உள்ள கவிஞர் திடலின் காலியிடத்தை துாய்மைப்படுத்தி அங்கு கடைகள் அமைக்க இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணி முடிந்த நிலையில், 120 வியாபாரிகளுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாமக்கல் பூங்கா சாலையில் உள்ள அந்த இடத்தில், நேற்று மாலை, 5:00 மணிக்கு குலுக்கல் முறையில், 56 சிறுவியாபாரிகளுக்கு கடை அமைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. காலை, 6:00 முதல், 10:00 மணி வரை, மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை காய்கறி, பழக்கடைகளை அமைத்து விற்பனை செய்து கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது.