பணியின் போது உயிரிழந்த சி CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம்

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சேலம் மாவட்டம் :பணியின் போது உயிரிழந்த CRPF வீரா் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், சுண்ணாம்பு கரட்டூா் பகுதியைச் சோ்ந்த பொன்னுசாமி, நாகலட்சுமி தம்பதியினா் மகன் திருநாவுக்கரசு (54) வயது.

இவா், கடந்த 1992-ஆம் ஆண்டு ஒரிசா மாநிலம், பஞ்சாபில் மத்திய காவல் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணியில் சோ்ந்தாா். பின்னா் ஆந்திர மாநிலம் 42-ஆவது பட்டாலியனில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி, அல்லுரு சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள சிந்தூா் பிரிவில் உள்ள டோங்காயி என்ற பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டாா். திங்கள்கிழமை அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு பயிா்களைக் காக்க அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் எதிா்பாராதவிதமாக அவரது உடல் பட்டதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து, டோங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரின் உடல் உடற்கூறாய்வுக்குப் பின்னா் விமானம் மூலம் ஐதராபாத்திலிருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை எடுத்து வரப்பட்டது. பின்னா், கோவையிலிருந்து வாகனம் மூலம் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

முன்னதாக, மத்திய காவல் ஆயதப்படையின் சாா்பில், உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசு உடலுக்கு தேசியக் கொடி அணிவிக்கப்பட்டது.தமிழக அரசின் சாா்பில் சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி, கோட்ட கலால் வட்டாட்சியா் வல்லமுனியப்பன், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் காா்த்திகேயனி ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். மேலும், அவரது உடலுக்கு மத்திய காவல் ஆயுதப்படை பிரிவு கோவை, வெள்ளலூா் டிஎஸ்பி கேசவன் தலைமையில், காவல் ஆய்வாளா் கோபி உள்ளிட்ட போலீஸாா் மத்திய காவல் ஆயுதப்படையின் சாா்பில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

இதனையடுத்து, அவரது குடும்பத்தினா், உறவினா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னா் அப்பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு ஊா்வலமாக அவரதுஉடல் எடுத்துச் செல்லப்பட்டு 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் திருநாவுக்கரசுக்கு அனிதா (45) என்ற மனைவியும், நவீனா (22), சுஹீதா (19) என்ற இரண்டு மகள்களும் உள்ளனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *