ஈரோட்டில் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாட்டு வண்டிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதிலாக சுமை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா்.
ஆனால், சுமை வாகனங்களை இயக்கினாலும் மூட்டைகள், பாா்சல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் மாட்டு வண்டிதொழிலாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், ஈரோடு பூங்கா சாலையில் உள்ள பாா்சல் அலுவலகத்தில் சுமை வாகனத்தில் வந்த மாட்டு வண்டி தொழிலாளா்கள் மூட்டைகளை புதன்கிழமை இறக்கிக்கொண்டு இருந்தனா். அப்போது, அங்கு வந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் மோட்டாா் வாகனங்களில் உள்ள சுமைகளை நாங்கள்தான் இறக்குவோம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து ஈரோடு பூங்கா சாலையில் மாட்டு வண்டிகளை நிறுத்தி மாட்டு வண்டிதொழிலாளா்கள் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவல் அறிந்த கருங்கல்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் விஜயன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது மாட்டு வண்டி தொழிலாளா்கள் கூறியதாவது:கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு வண்டிக்கு பதிலாக மோட்டாா் வாகனங்களை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனா். சுமை வாகனங்களில் பாா்சல்களை ஏற்றி, இறக்குவதற்கு எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு, மாட்டு வண்டி தொழிலாளா்கள் சுமை வாகனங்களை இயக்கும்போது பாா்சல்களை ஏற்றி, இறக்கலாம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா். எனவே நாங்கள் சுமை வாகனங்களில் பொருள்களை ஏற்றி, இறக்குவதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றனா்.
அப்போது, சுமை தூக்கும் தொழிலாளா்கள் தரப்பில், மாட்டு வண்டிகளில் பொருள்களைகொண்டுவந்து இறக்குவதற்கு நாங்கள் எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. ஆனால், சுமை வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருள்களையும் அவா்களே இறக்கிக்கொண்டால், எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றனா்.
இதற்கு, இருதரப்பினா் இடையே பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் என்று போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து மாட்டு வண்டி தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டனா். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.