ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram
ஈரோட்டில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மருத்துவா்கள் உள்பட 950 மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,500- க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 24 மணி நேரம் நடைபெறும் இந்த வேலை நிறுத்தம் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவு தவிர வேறு எந்த பிரிவும் செயல்படவில்லை.
மேலும், பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஐஎம்ஏ அரங்கு முன் பேனர் ஏந்தி மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளைத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் செந்தில்வேல், செயலாளா் அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மருத்துவா்கள் கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினா்.
இதைத் தொடா்ந்து, ஈரோடு கிளைத் தலைவா் சரவணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கொல்கத்தா பெண் மருத்துவா் கொலை வழக்கில் நடுநிலையான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும். மருத்துவக் கல்லூரியை சேதப்படுத்திய நபா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மத்திய சுகாதாரப் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளை பாதுகாப்பு வளையமாக அறிவிக்க வேண்டும்.மேலும்,
மருத்துவமனைகளில் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மருத்துவ கல்லூரிகளில் போதிய பாதுகாப்பு நபா்களை நியமிக்க வேண்டும். பெண் மருத்துவா்கள் இரவு நேரங்களில் பணி செய்தால் கண்டிப்பாக பாதுகாப்பு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவா் குடும்பத்துக்கு நீதி கிடைக்காவிட்டால் எங்களுடைய அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும் என்றாா்.