உள்ளாட்சி நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை பொதுமக்களுக்கு ஏன் அரசாங்கம் தெரியப்படுத்தக் கூடாது? மக்களின் வரிப்பணத்தை வாங்குகின்ற எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும், அதன் வரவு செலவு கணக்குகளை மக்களுக்கு கண்டிப்பாக காண்பித்தாக வேண்டும்.
அந்த வகையில் குழாய் வரி, துப்புரவு வரி, குடிநீர் வரி என்று எல்லாவற்றிற்கும் வரி போட்டு மக்களின் பணத்தை வசூல் செய்யும் அரசாங்கம் ,அதனுடைய வரவு செலவு கணக்கு மக்களுக்கு காட்ட வேண்டிய அவசியம் உண்டு. இதைத்தான் மக்கள் அதிகாரம் ஆரம்பித்த நாள் முதல் இந்த வரவு செலவு கணக்குகளை ஆன்லைனில் கொண்டு வர வேண்டும் என்று முதன் முதலாக இந்த பத்திரிகை உலகத்தில் செய்தி வெளியிட்ட ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் தான்.
இன்று ஆன்லைன் ஆக்கப்பட்டும், அதற்கான வரவு செலவு கணக்குகள், திட்டங்கள் பற்றிய செயல்பாடுகள் எதுவும் ,அந்த ஆன்லைனில் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தின் கணக்கு வழக்குகள் அரசாங்கத்தில் மட்டும் ஏற்றப்பட்டு வருகிறது .ஆனால் ,மக்களின் பார்வைக்கு அவை வெளியிடவில்லை .அது என்ன மோசடி செய்வதற்கா? அல்லது ஊழல் செய்வதற்கா? அந்த கணக்கு வழக்குகளை மக்களிடம் வெளியிடவில்லையா? என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி ?விரைவில் அரசாங்கம் இதை வெளியிடவில்லை என்றால், நிச்சயம் சமூக ஆர்வலர்கள் இதை நீதிமன்றம் கொண்டு செல்ல தயாராக உள்ளனர்.
மேலும், தமிழக அரசு இதை வெளியிடவில்லை என்றாலும், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ,இந்த கணக்கு வழக்குகளை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும். மேலும், தமிழகத்தில் தேனி மாவட்ட உப்பர் பட்டிஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் போல் எத்தனை ஊராட்சி மன்ற தலைவர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியுமா? ஒவ்வொரு மாதம் ஐந்தாம் தேதிக்குள் உப்பர் பட்டிஊராட்சி மன்ற அலுவலகத்தில் பார்ம் 30 யை தொங்கவிடும் ஒரே ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம்.
நான் பார்த்ததில் அவர் ஒருவர் மட்டுமே தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகுதியான தலைவர் என்பதை மக்கள் அதிகாரம் சார்பில் சான்று அளிக்கிறேன். பத்திரிகைகள் ஒருவருக்கு சான்று அளிக்கக்கூடாது. இருப்பினும் ,அவருடைய நிர்வாகத்தை பார்த்து அதற்கு சான்றளிக்கிறேன். காரணம் Form 30 என்பது ஒவ்வொரு மாதத்தின் அந்த கிராம பஞ்சாயத்து வரவு செலவு கணக்கின் விவரம் தான் .அதை ஒவ்வொரு மாதமும் தன்னுடைய பஞ்சாயத்து அலுவலகத்தில் அந்த பார்ம் 30 யை தொங்க விடுகிறார் என்றால், அவருடைய அரசியல் நேர்மையை பாராட்டுகிறேன்.
இதுவரையில் நானே பத்திரிகை துறையில் வந்து 35 ஆண்டுகள் ஆகியும், என்னுடைய வாழ்நாளில் ஒரு ஊராட்சி மன்ற தலைவர் கூட ,இப்படி வெளிப்படையாக கணக்கு வழக்குகளை மக்களின் பார்வைக்கு தொங்க விட்டு நான் பார்த்ததில்லை. மேலும், ஊரையே சாப்பிடலாமா? அல்லது ஊர் சொத்துக்களை கொள்ள அடிக்கலாமா? என்ற மனநிலையில் இருக்கின்ற பஞ்சாயத்து தலைவர்களுக்கு இந்த உண்மை புரியுமா? என்பது தெரியவில்லை.
அதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், ஒவ்வொரு மாதத்தின் வரவு செலவு கணக்குகளை ஆன்லைனில் வெளியிட வேண்டும். அடுத்தது இந்த பார்ம் 30 ஐ பஞ்சாயத்து அலுவலகங்களில் ஒவ்வொரு மாதம் ஐந்தாம் தேதிக்குள் அதை தொங்கவிட வேண்டும். இப்படி ஒரு ஜீவோ (GO) நமது தலைமைச் செயலக ஊராட்சி நிர்வாக செயலாளர் அமுதா ஐஏஎஸ் வெளியிடுவாரா ?
மேலும், தமிழக அரசு இதை செய்யவில்லை என்றால், மத்திய அரசு மக்கள் நலன் கருதி, இந்த பார்ம் 30 ஐ மக்களின் பார்வைக்கும், ஆன்லைனில் கிராம நிர்வாக பஞ்சாயத்து கணக்கு வழக்குகளையும், பொதுமக்களின் பார்வைக்கு வெளியிட மக்கள் அதிகாரம் சார்பில் முக்கிய கோரிக்கை.