மத்திய அரசு100 நாள் வேலை திட்டத்தை மாற்றி அமைக்காமல், இதன் ஊழலை ஒழிக்க முடியாது. இந்த பணத்தை மக்களுக்கு பயனுள்ள திட்டங்களுக்கு கொண்டு போய் செலவிடலாம் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூக நன்மைக்கான பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கை.மேலும்,
மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்குகிறதோ, அதில் 70% ஊழல் நடைபெறுகிறது. 30 சதவீதம் தான் மக்களிடம் போய் சேருகிறது. இந்த உண்மையை மத்திய அரசு உளவு துறை மூலம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா? தவிர,
50 வயதுக்கு மேல் உள்ளவர்கள், இதை நம்பி இருக்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்தில் உள்ள மேல்மட்டத்திலிருந்து, கீழ் மட்டம் வரை அதிகாரிகள், பஞ்சாயத்து தலைவர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், இவர்கள் வரை இந்த பணம் அவரவர் தகுதிக்கு ஏற்றவாறு, பங்கு போய்க் கொண்டிருக்கிறது. இது எப்படி இன்றைய தணிக்கை அதிகாரிகள் சரி செய்து கணக்கு காட்டுகிறார்கள்? அதில் அவர்களுக்கும் ,முக்கிய பங்கு உண்டு.
ஒவ்வொரு தணிக்கை அதிகாரிகளுக்கும், கணிசமான தொகை மாதந்தோறும் போய்க் கொண்டு தான் இருக்கிறது. இந்த ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், உடனடியாக மத்திய அரசு இந்த 100 நாள் வேலை திட்டத்தை எடுத்துவிட்டு அதற்கான மாற்று ஏற்பாடு நிச்சயம் செய்தால்தான், இதை ஒழிக்க முடியும்.
100 நாள் வேலை திட்டம், ஒரு கூட்டு களவாணி திட்டமாக நாட்டில் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல, இந்த 100 நாள் வேலை திட்ட நிதியை எந்தெந்த பஞ்சாயத்து தலைவர்கள், எந்தெந்த வேலைக்கு எடுத்து செலவு செய்கிறார்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியுமா? அந்த வேலையின் தரம் என்ன? அதனால், மக்களுக்கு என்ன பயன்?
இப்படி எதுவுமே இல்லாமல் ,இந்த நிதி அரசு அதிகாரிகளும், பஞ்சாயத்து பிரதிநிதிகளும் பங்கு போட்டு சாப்பிடும் ஒரு கூட்டு களவாணி திட்டம் தான் இந்த 100 நாள் வேலை திட்டம். அதனால், இதை உடனடியாக எடுத்து விட்டு மத்திய அரசு அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் , 50 வயதுக்கு மேற்பட்ட 100 நாள் வேலை பணியாளர்களுக்கு, மாதம்தோறும் ஓய்வூதியம் கொடுப்பது போல ரூபாய் 1500 அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு ,மீதி இருக்கிற பணத்தை மக்களின் நல திட்டங்களுக்கு செயல்படுத்தலாம்.
இதனால் பல கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி வீணடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் .இது உண்மையிலேயே மக்களின் பயன்பாட்டுக்கு உள்ள திட்டமல்ல, பெருமைக்கு, ஊருக்கு பந்தா காட்டும் வேலை. இவையெல்லாம் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் போட்டோ போட்டு காட்சிப்படுத்தக்கூடிய திட்டம் தான். உண்மையிலேயே இதனால் விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.அதற்கு இந்த 100 நாள் வேலை திட்டத்திற்கு முக்கிய பங்கு உண்டு.
அதனால், பிரதமர் நரேந்திர மோடி எத்தனையோ பல நல்ல விஷயங்கள் நாட்டு நன்மைக்காக கொண்டு வந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். அதுபோல இதையும் மாற்றி அமைத்து செயல்படுத்த வேண்டும். மேலும் இது 100 நாள் வேலை திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் சொன்ன ஒரு கருத்து. அது மட்டுமல்ல, இதில் 240 ரூபாய் தான் அந்த 100நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு கொடுக்கப்படுகிறதாம்.
அப்படி என்றால், அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு ?அதில் யாருக்கெல்லாம் எவ்வளவு பங்கு? ஒரு வாரத்திற்கு எவ்வளவு தொகை? ஒரு மாதத்திற்கு எவ்வளவு தொகை? இதையெல்லாம் மத்திய அரசு உளவுத் துறை மூலம் ரகசிய ஆய்வு செய்து ,எவ்வளவு ஊழல் நடந்திருக்கிறது? என்பதை ஒரு சர்வே எடுக்க சொல்லுங்கள் .உண்மை உங்களுக்கு புரியும். மேலும், எத்தனை பஞ்சாயத்து தலைவர்களின் ஊழல் புகார் மற்றும் வழக்குகள் பற்றி மத்திய அரசு ஆய்வு செய்து பார்த்தால் ,இதனுடைய உண்மை நிலை என்ன? என்பது தெரியும்.தவிர,
100 நாள் வேலை திட்டத்தில் கணக்குக்கு தான் வந்து வேலை செய்கிறார்கள். அங்கு வேலை செய்ய வேண்டும் என்று ஒருவரும் வருவதில்லை. கணக்குகாட்ட, வருகின்ற வேலை திட்டம் தான் 100 நாள் வேலை திட்டம்.
எனவே, மத்திய அரசு இந்த நிதியை வீணடிக்காமல், பயனுள்ள திட்டங்களுக்கும், வருங்கால இளைய தலைமுறைக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களுக்கும், கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை.