தர நிர்ணயம் மற்றும் தர முறைகளுக்கு மாநில அளவிலான கூட்டம் தமிழ்நாடு அரசு
தலைமைச் செயலகத்தில் இன்று (08.05.2023) நடைபெற்றது. குழாய் மூலம் குடிநீர் விநியோக மேலாண்மை அமைப்புக்கான தரநிலைகளை செயல்படுத்துதல், ஆயத்த கலவை தயார்நிலை கான்கிரீட் செயல்முறை சான்றிதழ், மேலாண்மை அமைப்புகள் சான்றிதழ் திட்டம், முத்திரையிடுதல், பால் மற்றும் பால் பொருட்களுக்கான இணக்க மதிப்பீட்டுத்
திட்டம், சாலை போக்குவரத்து பாதுகாப்பு மேலாண்மைத் திட்டம், மத்திய அரசால் வெளியிடப்பட்ட தரக்கட்டுப்பாட்டு உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான அணுகுமுறை
போன்ற இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு
பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழ்நாடு மாநிலத்தில் தர நிர்ணயம் குறித்த அமைப்புகளை உருவாக்குவது
தொடர்பாகவும் விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்த தர நிர்ணய அமைப்புகளின் முக்கிய பணியானது அரசு, தொழில்துறை மற்றும்
இந்திய தர நிர்ணய அமைவனம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு தகவல் தொடர்பு
பாலமாக செயல்படுவதே ஆகும். மாநில அரசு அதிகாரிகளின் தரநிர்ணயம் குறித்த
திறனை மேம்படுத்துவது, தரநிலைகளை உருவாக்குதல், தர நியமங்கள் உபயோகத்தை அதிகரித்தல், இணக்க மதிப்பீடு மற்றும் நுகர்வோர் மேம்பாடு ஆகியவை குறித்தும் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போது, விவாதிக்கப்பட்டது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் வெ. இறையன்பு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, கூடுதல் தலைமைச் செயலர் (கூட்டுறவு, உணவு மற்றும்
நுகர்வோர் பாதுகாப்புத் துறை), டாக்டர் ஜே ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் ஜெனரல் (தெற்கு) திரு யு எஸ் பி யாதவ், சென்னை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் திருமதி ஜி.பவானி ஆகியோர் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கமளித்தனர்.