நாட்டில் கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துவதன் மூலம் கிராமப்புறத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் தொலைநோக்கு பார்வையாக மத்திய அரசு ஐந்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
அதாவது புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, ரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் கூட்டுறவு அமைச்சகம் மற்றும் உரங்கள் துறையின் மூத்த அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும்,
இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஐந்து முக்கிய முடிவுகள்:
- நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சம் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் படிப்படியாக உரங்களை சில்லரை விற்பனை செய்யும் அமைப்புகளாக செயல்பட ஊக்கப்படுத்தப்படும்.
- பிரதமரின் விவசாய வளம் மையங்களாக தற்போது செயல்படாத தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் இந்த வரம்புக்குள் கொண்டுவரப்படும்.
- தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள், இயற்கை உரங்கள் சந்தையுடன் இணைக்கப்படும்.
- உரங்கள் துறையின் சந்தை மேம்பாட்டு உதவித்திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களும் மொத்த வியாபார/ சில்லரை வியாபார அமைப்புகளாக சேர்க்கப்படும்.
- உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான ட்ரோன் தொழில் முனைவோராக தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபடுத்தப்படும். சொத்துக்கள் அளவெடுப்பதற்கும் ட்ரோன்கள் பயன்படுத்தப்படும்.
இந்த முடிவுகளால் தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களின் வருவாய் அதிகரிக்கும். மேலும் கிராமப்பகுதிகளில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அத்துடன் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள், வேளாண் கருவிகள் போன்றவற்றை உள்ளூர் நிலையிலேயே விவசாயிகள் பெற முடியும்.