ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியின் பொருளியல் துறையுடன், இணைந்து சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. அதில், பொருளியல் துறைத் தலைவர் எலிசபெத் ராணி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி தலைமையுரை ஆற்றினார்.
அபுதாபி DAM திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஸ்ரீதேவி சிவானந்தம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் துறை குமரேசன், சூரியன் பண்பலை மூத்த அறிவிப்பாளர் விஜி பூரணசிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, மாணவியருடைய சமூக பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்பது எத்தகைய மாற்றங்களை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதையும்,தனிமனித பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ?என்பதை பற்றியும் எடுத்துரைத்தனர்.
கருத்தரங்கின் மற்றொரு நிகழ்வாக ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றத்தின் அமைப்பாளர் மற்றும் தவப்புதல்வி தமிழ் காலாண்டிதழின் இதழாசிரியர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்களுடன் லிபியா சபா பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்ந்த மேனாள் பேராசிரியர் முனைவர் ரவீந்திரன் அவர்கள் தவப்புதல்வி காலாண்டிதழை வெளியிட முனைவர் ஸ்ரீதேவி சிவானந்தம் முதல் இதழை பெற்றுக்கொண்டார்.
நீ காண விரும்பும் மாற்றமாய் மாற்றத்தை நோக்கிய பயணம் என்கிற தவப்புதல்வி இதழின் நோக்கத்தை மையப்படுத்தி காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் பாரதி ராணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் முனைவர் வள்ளியம்மாள் , முனைவர் ஸ்ரீலங்கா மீனாட்சி , சீதா லட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியின் பொருளியல் துறை மற்றும் வணிகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கருத்தரங்கில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் டி. சுஜா நன்றியுரையாற்றினார். வணிகவியல் துறை உதவிப் பேரா.சி. விஜயசந்திரிகா நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.