தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடப்பு குருவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா, தாளடி சாகுபடிகள், நடைபெறுமா? என்பது மாபெரும் கேள்விக்குறியே.. … ! மேலும்,
தென்மேற்கு பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து விட்ட இவ்வேளையில், நெல்லை மட்டும் சாகுபடி செய்யும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் காவிரி நீரின்றி ஏரிகளும், குளங்களும் வறண்டு கிடக்கின்றன. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களும் விவசாயம் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன.
இதனால் விவசாயத்தை நம்பி உள்ள பல ஆயிரம் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயக் கூலிகளும், வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலை நீடித்தால், நெல் விளைச்சல் குறைந்து அரிசி விலை ஏறிவிடும் என்பதில் ஐயமில்லை. அதேநேரம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்குமா? அல்லது காவிரி நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமா? என்பது விவசாயிகளின் மாபெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.
தமிழக அரசு மத்திய அரசுடன் கலந்து உரிய நடவடிக்கை எடுத்து காவிரி நீரைப்பெற்றுத் தராவிட்டால், கடந்த காலங்களில் நடைபெற்ற *எலிக்கறி” தின்று வாழக்கூடிய ஒரு அவல நிலை ஏற்பட்டு விடுமோ என்று விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசு உரிய நேரத்தில் காவிரி நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும்,
விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்குமா ? அரசு என்ன செய்யப் போகிறது? என்று எல்லோரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். வறண்ட காவிரி போல் விவசாயிகளின் வாழ்க்கையும் வறண்டு விடுமா? அல்லது இயற்கை பொய்த்து விட்டது போல் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் கைவிரித்து விடுமா… ? பொறுத்திருந்து பார்ப்போம்.