மே 15, 2024 • Makkal Adhikaram
காவல்துறை என்றால் எவ்வளவு கௌரவமான துறை அந்த துறையை கலங்கப்படுத்தி விட்டார்கள். எப்போது அரசியல்வாதிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு எடுபிடி வேலை செய்ய காவல்துறை ஆரம்பித்ததோ, அப்போதே அதன் கௌரவம், மரியாதை இழந்து விட்டார்கள்.
பணத்திற்காக பொய் வழக்கு, கஞ்சா வழக்கு, கட்சி ரவுடிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சட்டத்தை மீறும் செயலில் காவல்துறை வந்துவிட்டது. அது மட்டுமல்ல,இவர்களுடைய பாதுகாப்பு உழைக்கும் மக்களுக்கா? சமூக நன்மைக்காக போராடும் மக்களுக்காக?, அல்லது அரசியல் கட்சியில் ரவுடிகள் மற்றும் பிராடுகளுக்கா?இப்படிப்பட்ட நிலைமையில் தான் காவல்துறை இருப்பதால், லாக்கப் டெத், சிறைக் கொடூரங்கள், மனிதநேயமற்ற செயல்கள்,தொடர்வதால் சமூகத்தில், காவல் துறை மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இவர்கள் எதை செய்யவும் துணிவார்கள். அந்த அளவிற்கு ஒரு மோசமான கரை காவல்துறையின் மீது படிந்துள்ளது.
இது ஏன்? மக்களுக்காக பணி செய்ய வேண்டிய காவல்துறை இன்று ஆட்சியாளர்களால், இந்த அவமானத்தை, மரியாதை இன்மையை மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள். ஒரு பக்கம் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனையாளர்களிடம் மாமுல், குற்றவாளிகளிடம் பேரம், ஆட்சிக்கு எதிராக தவறுகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீது வழக்குகள், சமூக ஆர்வலர்கள் மீது வழக்குகள், பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள், இப்படி தொடர் காவல்துறையின் சட்ட விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏனென்றால் அவர்கள் எழுவது தான் சட்டம் .இதை ஏற்றுக்கொள்ளும் நீதிபதிகளும் உண்டு. ஏற்காத நீதிபதிகளும் உண்டு.
நாட்டில் காவல்துறை அவசியம் சீர் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. இல்லையென்றால், நாட்டில் குற்றங்கள் பெருகி சமூக மக்களுக்கு ஒரு போராட்டத்தை வாழ்க்கையில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதை ஒடுக்க வேண்டிய காவல்துறை இன்று அவர்களுக்கு துணை போய்க்கொண்டிருக்கிறதா? என்ற கேள்வி எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
எத்தனையோ குற்றங்கள் காவல்துறையின் ரகசிய ஒத்துழைப்போடு நடந்துள்ளது. அதில் வெளிவந்து சிலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.வெளிவராமல் மறைக்கப்பட்டதும் உண்டு. காவல்துறை என்றால் திருடனுக்கு பயம் வர வேண்டும். சமூக குற்றவாளிகளுக்கு பயம் வர வேண்டும். அரசியல் கட்சி பிராடுகளுக்கு பயம் வர வேண்டும். கிரிமினல்களுக்கு பயம் வர வேண்டும். ஆனால், மக்களுக்கு அல்லவா பயம் வந்துள்ளது.
காவல்துறையில் எப்படிப்பட்ட நேர்மையான அதிகாரிகள் எல்லாம் இருந்தார்கள். இப்போது அரசியல் கட்சி பிராடுகளுக்கு துணை போகும் அதிகாரிகளா? என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.காவல்துறை அரசியல் ,அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒரு வகையிலும், சாமானிய மக்களுக்கு ஒரு வகையிலும் செயல்பட்டால், எப்படி காவல்துறையின் நேர்மை, நம்பிக்கை மக்களுக்கு காவல்துறையின் மீது வரும்? அது மட்டுமல்ல,
அரசியல் கட்சியில் எவ்வளவு அசிங்கமாக திட்டுபவன் எல்லாம் கார்ப்பரேட் மீடியாவில் தன்னை பெரிய ஆளாகவும், மற்ற பத்திரிகைகளில் வெளிவரும் உண்மைகள் சிறியதாகவும் மக்களுக்கு தெரிகிறதா?அவர்கள் திட்டினாள் கருத்து சுதந்திரம். ஆனால், யூட்யூபில் ஆட்சிக்கு எதிராக பேசினால், அது குற்றம்.அரசியல் கட்சியில் அவன் ரவுடியாக இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பத்திரிக்கையில் சமூக நலனுக்காக போராடினால், அவன் தவறானவன். சட்டத்தின் ஓட்டையை வைத்து யாரை ஏமாற்றுகிறீர்கள்? இதைப்பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இதற்கு முடிவு கட்டுவார்களா? என்பது தான் எங்களை போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்கள் கேள்வி ? இந்த நிலையில்தான் காவல்துறை செயல்படுகிறது.மேலும்,
பிலிப்ஸ் ஜெரால்ட் மனைவி ஒரு விவரமானவர் என்பது அவர் கேட்கும் கேள்வியில் இருந்து தெரிகிறது. அதுவே ஒரு அப்பாவி பெண்மணி, படிக்காத பெண்மணி என்றால், அவர்கள் நிலைமை என்னவாக இருக்கும்? என்பதை யோசித்துப் பாருங்கள். அவர்கள் விவரமாக இருக்கவே உடனடியாக மீடியாவை வர வைத்திருக்கிறார்கள். இவர்கள் சோதனை என்று கஞ்சாவை தூக்கி வீட்டுக்குள்ளே போட்டுவிட்டு வருவார்கள். அப்படி சிந்திக்க வேண்டிய நிலைமை ஏன்? திருடன் உடைய முகத்தைப் பார்த்தால், போலீசுக்குத் தெரியும். நல்லவனுடைய முகத்தைப் பார்த்தால் போலீசுக்கு தெரியாதா? ஒரு சாதாரண ரயில் டிக்கெட் பரிசோதனையாளர் நேராக வந்து டிக்கெட் இல்லாதவனை தான் பிடிக்கிறார். அது போல் பல இடங்களில் அவர் பிடித்ததை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.
ஆனால், காவல்துறையில் யார் கஞ்சா விற்பவன்? யார் போதைப் பொருள் கடத்துபவன்? யார் சமூக குற்றவாளி என்பது தெரியாதா ? காவல்துறையில் என்ன ட்ரெய்னிங் எடுத்தீர்கள்? இன்றைய காவல்துறையினர் கௌரவத்தை விட்டுவிட்டு, தனக்கு கொடுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி பேசுவதற்கு அல்லது எடுத்து சொல்வதற்கு தகுதியான பத்திரிகையாளர்கள் ஊடகங்களில் இல்லையோ என்ற கருத்தை பதிவு செய்கிறேன்.
கார்ப்பரேட் பத்திரிகையும், தொலைக்காட்சியும் மட்டுமே மக்கள் நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்றைய இளைய சமுதாயம் அதை நம்பவில்லை. அதை நான் வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.இன்றைய கார்ப்பரேட் பத்திரிகைகளில், தினசரி பத்திரிகைகளில் சவுக்கு சங்கரை காவல்துறை என்ன சொன்னதோ, அதைத்தான் சவுக்கு சங்கர் குண்டாஸில் கைது என்று போட்டுக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எதற்காக கைது? எந்த நோக்கத்திற்காக கைது? ஏன் கைது? காவல்துறை சொல்வது உண்மையா? பொய்யா? பொய் வழக்கு போட்டது சரியா? தவறா? கஞ்சா வழக்கு உண்மையா? பொய்யா? இதுதான் மக்களுக்கு தேவை.மேலும்,
சட்டத்தின் முன் அனைவரும் சமம். காவல்துறை திருடனுக்கு பாதுகாப்பா? அல்லது அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பா? யாருக்காக அவர்கள் பணி இருக்க வேண்டும்? மக்கள் வாழ்க்கையோடு போராடுகிறார்கள். இயற்கையோடு போராடுகிறார்கள். ஆட்சியாளர்களோடு போராடுகிறார்கள். சட்டத்தின் ஓட்டையில் காவல்துறை போடுகின்ற பொய் வழக்குகளில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உணவுக்காக அன்றாட தேவைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கல்விக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை போராட்டங்களில் வாழ்கின்ற ஒரு மனித வாழ்க்கை எப்படி ?மக்கள் நிம்மதியாக வாழ முடியும்? என்பதை மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
மக்கள் சிந்திக்காமல் போதைக்கு அடிமையாகி போதைகளில் மிதந்து கொண்டிருந்தால் உண்மையின் அர்த்தம் தெரியாத முட்டாள்களாக தான் இருப்பார்கள். உழைத்து வாழ தெரியாதவர்கள், ஊரை ஏமாற்றி சொத்துக்களை சேர்ப்பதில் குறிக்கோளாக இருப்பவர்களுக்கு, வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத முட்டாள்களாக தான் இருப்பார்கள். அவர்களுடைய நோக்கம் பணம், பதவி மட்டுமே இருக்கும். இப்படிப்பட்ட பணம் ,பதவி, கௌரவம் அதுவும் நிலையானது அல்ல. அது சுயநலத்திற்காக பயன்படுத்தினால், அதற்கான தகுதி அவர்களிடம் இருக்காது.
அதனால், காவல் துறை மனிதனாக வாழ்வது மிக முக்கியம். இங்கே யாருக்காகவோ நீங்கள் தவறு செய்தால், மக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடுவார்கள் .அதனால், தவறு செய்யும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் போனதால் நாட்டில் இவ்வளவு பெரிய பிரச்சனைகள் தொடர்கிறது .அதை தடுக்க வேண்டும் என்றால் தவறு செய்யும் காவல்துறையினர் மீது உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை தேவை. அந்த விசாரணை காவல்துறை அதிகாரிகளே நடத்தக் கூடாது.
அதை நீதிபதிகளும், ஐஏஎஸ் அதிகாரிகளும் தவறு செய்யும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் ஒரு தனி டிபார்ட்மெண்ட் உருவாக்க வேண்டும் . அப்போதுதான் இது போன்ற காவல்துறையின் தவறுகள் கண்டித்து நடவடிக்கை எடுக்க முடியும் .இதை நீதிமன்றத்தில் வாய்தா வாங்கும் வழக்காக போட்டுக் கொண்டிருந்தால், தவறு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அப்படி எடுத்தால் தான் சமூகத்தில் குற்றங்கள் குறையும். அதுவரை இவர்கள் மீது மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாக தான் இருக்கும் .