ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram
தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகளுக்கு, அந்தப் பள்ளியில் என்.சி.சி. முகாம் நடத்திய சிவராமன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்து, 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 மாணவிகள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் நடந்தது என்ன? என்பது குறித்து தனியார் பள்ளிகள் இயக்குனரகம் சார்பில், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மதுமதிக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணை மேலும், தீவிர படுத்தப்படும் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ,சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தெரியாமல் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தனியார் பள்ளி இயக்குனராக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து, போலி என்.சி.சி. முகாமில் 13 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர் என்ற தலைப்பில் வெளியான ஊடக அறிக்கையை தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நியாயமான விசாரணையை உறுதி செய்யுமாறு சென்னை டிஜிபிக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்குள் காவல்துறை மற்றும் மாநில அரசிடம் இருந்து விரிவான நடவடிக்கை அறிக்கை கோரப்பட்டுள்ளது.மேலும்,
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி இன்று பள்ளி திறக்கப்படும். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நான்கு ஆசிரியர்கள் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழல் இருப்பதால், பள்ளி திறப்பதை ஒத்தி வைக்குமாறு காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், இன்று திறக்கப்பட இருந்த பள்ளி கூடம் திறக்கப்படவில்லை. பள்ளிக்கூடம் திறப்பது குறித்து பிறகு அறிவிக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.மேலும்,
தற்பொழுது தமிழகத்தின் 57 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பணியிட மாறுதல் பட்டியலில் 14 தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்களும், மீதமுள்ள 43 மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்கக்கல்வி மற்றும் இடைநிலை பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர்கள் .
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தனியார் பள்ளிகளுக்கான இயக்குநராக இருந்த ரமாவதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.