ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் சுமார் 40 வருடங்களாக 28 குடும்பங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் சொந்த இடம் இல்லாமலும், தங்க வீடு இல்லாமலும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர். இவர்கள் ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய வாழ்வாதாரம் ஊசிமணி, பாசிமணி விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதில் இவர்களுக்கு வாழ்க்கையை தள்ளுவதே பெரும் போராட்டம்.இதில் சொந்த இடமும், வீடும் எப்படி இவர்களால் வாங்க முடியும்? மேலும், தற்போது அடிக்கின்ற வெயில், மழை, காற்று, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த மக்கள் பாதிக்கப்பட்டு, பல்வேறு இண்ணல்களை அனுபவித்து வருகின்றனர். அது பற்றி நரிக்குறவர்களின் நாட்டாமை கடம்பன் இதைப் பற்றி மனம் திறந்து எமது நிருபரிடம் தெரிவித்துள்ளார் .
மேலும், ஆற்காடு பேருந்து நிலையம் 6 மணிக்கு மேல் மது பிரியர்கள் குடித்து விட்டு வந்து, எங்கள் மீது கல் எறிகின்றனர் .இரவு நேரங்களில் பிரச்சனை செய்கின்றனர். படுத்து உறங்கும்போது எங்கள் கொசுவலைகள் கிழித்து விடுகின்றனர். தவிர, மழை நேரங்களில் படுத்து உறங்க இடமில்லாததால் கட்டிட தாவரங்களில் படுத்து உறங்கும்போது, கடைக்காரர்கள் எங்கள் மீது தண்ணீர் ஊற்றி எழுப்பி துரத்துகின்றனர்.
மேலும், பேருந்து ஓட்டுநர்கள் எங்கள் மீது ஏற்றுவது போல பயம் காட்டுகின்றனர். இரவிலும், பகலிலும் எங்களுக்கு என்ன நடக்குமோ என்று பயந்து, பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார். மேலும், அரசு அதிகாரிகளிடம் இது பற்றி வீடு கட்டி தர பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடைசியாக எங்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அனைத்தையும் கலெக்டரிடம் ஒப்படைத்துவிட்டு, மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்கிறார்கள்.
மேலும், நரிக்குறவர் பெண்கள் நம்மிடம் பேசும் போது மது பிரியர்கள் இரவு நேரங்களில் குடித்துவிட்டு வந்து பணம் தருகிறேன். படுக்கைக்கு வாடி என்று கூப்பிட்டு பாலியல் தொந்தரவு செய்கின்றனர். குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் இல்லை. உடை மாற்ற மறைவான இடம் இல்லை. காற்று மழையில் மிகவும் கஷ்டப்படுகிறோம். எங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க ஆசை தான். தங்குவதற்கு இடம் இல்லை என்று கண்கலங்குகிறார்கள்.
மேலும், எங்களுடைய பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கிருந்து 10 கிலோமீட்டர் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தான் இடம் தருவதாக சொல்கின்றனர். ஆனாலும், அந்த இடம் கூட கொடுத்த பாடு இல்லை. சொன்ன கலெக்டர், தாசில்தார் மாறிவிட்டார்கள். கொடுத்த மனு எங்கே போனது? என்றே தெரியவில்லை . மேலும், நரிக்குறவர்களின் வேதனைகளைப் பற்றி எமது நிருபர் ஆற்காடு டவுன் விஏஓவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் .
அதற்கு நரிக்குறவர்கள் குடியிருப்பதற்கு லாடபுரம் , ஆகிய இரண்டு இடங்களை காண்பித்தோம். பஸ் வசதி இல்லாத காரணத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். தற்போது பஸ் வசதி உள்ள சக்கரம் மல்லூர் கிராமத்தில் உள்ள இடத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். விரைவில் அவர்களுக்கு இடம் தர ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், இப் பிரச்சனை தொடர்பாக ஆற்காடு வட்டாட்சியரிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, அவசரக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக கூறி அலைபேசியை துண்டித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நரிக்குறவர் மக்களும் மனிதர்கள் தான் என்பதை அதிகாரிகள் புரிந்து அவர்களுக்கு விரைவில் வீடு கட்டி தர வேண்டும் என்பதுதான் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கிய எதிர்பார்ப்பு .