ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram
விவசாயிகள் புகார்களை தெரிவிப்பதற்கு தானியங்கி தொலைபேசி எண்ணை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை வடக்கு கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) அலுவலகத்தில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகள் வருமாறு:
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தண்டபாணி: மேட்டுப்பாளையம் தாலுகாவுக்குட்பட்ட பவானி ஆற்றில் ஆலை கழிவுகள் சரியான முறையில் சுத்திகரிப்பு செய்யாமல் கலக்கச்செய்கின்றனர். இதனால் ஆற்றுநீர் மாசுபடுகிறது. அதிகாரிகள் மற்றும் தொழிற்சாலைகள் தரப்பில் ஒரு குழு அமைத்து ஆற்றுநீர் மாசுபடுவதை தடுக்க வேண்டும்.
காளப்பட்டி உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் தங்கராஜ்: காளப்பட்டியிலுள்ள ஐந்து ஏக்கர் 45 சென்ட் பரப்பளவில் உள்ள கதிரா குட்டையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புனரமைக்கவும் மரம் நடுவதற்கு தடையின்மை சான்று வழங்கியதை ரத்து செய்யவும், நீர்நிலையை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து நான்கரை ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகிறோம் எந்த பலனுமில்லை. இந்நிலை தொடர்ந்தால் நீர்நிலைகள் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.சமூக ஆர்வலர் கோவை சுரேஷ்: காரமடை போலீஸ் எல்லையில் 115 கிராமங்கள் மற்றும் ஒரு நகரமும் உள்ளன. மிகப்பெரிய அளவில் உள்ளதால் போலீசாரால் நிர்வகிக்க முடியாமல் திணறுகின்றனர்.
விவசாய விளைபொருட்கள் மற்றும் கருவிகள் ஏராளமாய் திருடு போகின்றன. கேரள எல்லையான கோபனாரி சோதனை சாவடி வழியாக திருடர்கள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.காரமடை போலீஸ் ஸ்டேஷனை இரண்டாக பிரித்து புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும். விவசாய வேளாண் உற்பத்தியாளர்கள் குறைகளை களைய தானியங்கி இலவச தொலை பேசி எண்ணை அறிமுகப்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பழனிச்சாமி: காரமடை ஒன்றியம் கெம்மாரம்பாளையம் கண்டியூர் இருளர்பதியிலிருந்து வெள்ளியங்காட்டிற்கு 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் அன்றாடம் பள்ளிக்கு 6 கி.மீ., நடந்து செல்கின்றனர். பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்.
பட்டா, சிட்டா, நிலஅளவை, மின்மீட்டர் மாற்றம், வேளாண் விளை பொருள் சேதம், காட்டுவிலங்குகள் விவசாயநிலங்களுக்குள் வருவது உள்ளிட்ட ஏராளமான கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
அனைத்து கோரிக்கைகளின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோட்டாட்சியர் கோவிந்தன் கூறினார்.