ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram
திருப்பூர் மாவட்டம் காங்கயம், பகவதிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. பி.ஏ.பி., வெள்ளகோவில் பாசன கிளை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார்.
நேற்று இவரது தோட்டத்துக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கிருந்த செம்மறி ஆடுகளை துரத்தி கடித்து குதறியதில், இரண்டு ஆடுகள் இறந்தன. ஆறு ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது. ஆடுகளை நாய்கள் கடித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆவேசமடைந்த விவசாயிகள், வேலுசாமி தலைமையில் இறந்த ஆட்டையும், காயம் பட்ட ஆட்டையும் காங்கயம் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இறந்த ஆடுகளை அலுவலகம் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாய்களால் கடித்து இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
விவசாயிகள் மத்தியில் பேசிய தாசில்தார் மயில்சாமி, கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.