செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram
ஈரோடு மாவட்டம், கோபி, மொடச்சூர், கவின் கார்டனை சேர்ந்த அருண் ரங்கராஜன், 38; கடந்த 2012ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியை துவக்கினார். சக ஐ.பி.எஸ்., அதிகாரியான இலக்கியாவை, காதலித்து திருமணம் செய்தார். தம்பதியருக்கு மகன், மகள் உள்ளனர்.
கர்நாடகா மாநிலம், கலபூரகி மாவட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.,யாக அருண் ரங்கராஜன் பணியாற்றினார். அதே நேரம், மனைவி இலக்கியா கர்நாடகா வி.வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவில் பணியாற்றினார்.
கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்ட எஸ்.பி.,யாக அருண் ரங்கராஜன் பணியாற்றிய போது, எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றிய சுஜாதா, 42, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுஜாதாவின் கணவர் கண்டப்பா, போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இதுகுறித்து, இலக்கியாவிடம், கண்டப்பா தகவல் தெரிவித்தார்.
இலக்கியா கேட்டதால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அருண் ரங்கராஜன், இரும்பு பைப்பால் கண்டப்பாவை அடித்தார். தொடர்ந்து, கண்டப்பா புகாரில், அருண் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இலக்கியாவும் விவாகரத்து பெற்று அவரை பிரிந்தார். இலக்கியா வீடு முன், அருண் ரங்கராஜன் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதையடுத்து, கடந்த பிப்., மாதம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் கோபி, நஞ்சப்பா நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அருண் ரங்கராஜன், சுஜாதாவுடன் வந்து விட்டார். சுஜாதா விடுப்பும் எடுக்கவில்லை. பணியிலும் சேரவில்லை. இதனால் அவரை விட்டோடியாக கர்நாடகா போலீசார் கணக்கில் வைத்துள்ளனர்.
சுஜாதாவுடன், அருண் ரங்கராஜன் திருச்சியில் உள்ள கோவில்களுக்கு சென்று வந்தார். அப்போது அர்ச்சகரின் கை, சுஜாதா மீது பட்டது தொடர்பாக அர்ச்சகரை தாக்கியுள்ளார்.அங்கு அர்ச்சகர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். இதில், அவர் எஸ்.பி., என தெரியவந்ததால், சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.
கோபியில் வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் இப்பிரச்னையை சுஜாதாவிடம் எழுப்பி, அவரை அருண் ரங்கராஜன் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த சுஜாதா, கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின், கோபி போலீசில் புகாரளித்தார்.போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில், அருண் ரங்கராஜன் மீது வழக்குப்பதிந்தனர்.
அவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப முற்பட்டனர். சொந்த ஜாமின் கிடைத்தது. இதையடுத்து, கோபியில் வசித்து வந்தார்.சஸ்பெண்ட் காலம் முடிந்து மீண்டும் பணியில் சேர சில நாட்களே இருந்த நிலையில், கர்நாடகாவில் இருந்து சுஜாதா, மீண்டும் அருண் ரங்கராஜன் வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், அருண் ரங்கராஜன் நேற்று முன்தினம் தன் வீட்டுக்கு தானே தீ வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் படி, கோபி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். போலீசார் வீட்டுக்கு சென்று அவரை சமாதானம் செய்ய முயன்றனர்.அப்போது, போலீசாரையும் தாக்கி, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிந்து அருண் ரங்கராஜனை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வீட்டிற்கு தீ வைத்த போது, அருண் ரங்கராஜன் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.