செப்டம்பர் 10, 2024 • Makkal Adhikaram
நிலக்கோட்டை அருகே மட்டப்பாறை ஊராட்சியில், சிமெண்ட் ரோடு போட்டதாக கணக்கு காட்டி, பணம் மோசடி செய்ததாக தண்டோரா மூலம் அறிவிப்பு செய்த சமூக ஆர்வலரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, மட்டப்பாறை ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த மகேந்திரன் தலைவராகவும், ரமேஷ் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், மட்டப்பாறை ஊராட்சியில் 2023 – 24 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், தெருக்களுக்கு சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் வடிகால் வாய்க்கால் அமைத்ததிலும் வரத்து வாய்க்கால் சுத்தம் செய்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. குறிப்பாக, மட்டப்பாறை காலனி பகுதியில் அய்யனார் வீடு முதல் தமிழன் வீடு வரை சிமெண்ட் ரோடு போட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் கணேசன் வீடு முதல் முருகன் வீடு வரை சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த சாலை அமைக்கப்படவில்லை எனக் கூறி, மட்டப்பாறையைச் சேர்ந்த அய்யனார் என்ற சமூக ஆர்வலர் தண்டோரா மூலம் தெருதெருவாக சென்று மட்டப்பாறை காலனி பகுதியில் சிமெண்ட் ரோடு போட்டதாக, போடாத தெருக்களை கணக்கு காட்டி மோசடி செய்ததாக தண்டோரா அடித்து அறிவித்துள்ளார். அப்போது, அவர் எந்த வீதியும் போடவில்லை மட்டப்பாறை பஞ்சாயத்தில் மோசடி நடக்கிறது. இந்த மோசடியை அரசு தான் நேரடியாக கேட்க வேண்டும். இதனை பொதுமக்களும் தெரிந்து கொள்ள வேண்டுமென கூவி, கூவி தண்டோரா போட்டார்.
தண்டாரோ போட்ட நபர் மட்டப்பாறை ஊராட்சியில் உள்ள, அனைத்து தெருகளுக்கும் சென்று அறிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மட்டப்பாறை ஊராட்சியில் உள்ள 9 வார்டுகளில் 5 வது வார்டு மெம்பராக உள்ள செல்லம்மாள் கூறுகையில், கடந்த 4 வருடங்களாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெறும் மாதாந்திர உறுப்பினர் கூட்டத்தில் எனக்கு நாற்காலியில் உட்கார அனுமதி இல்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் என்பதால் தரையில் தான் உட்காருவேன்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவள் என்பதால் எனது வார்டில் எந்த நலத்திட்டங்களும் செய்வதில்லை. புறக்கணிக்கப்படுகிறது என்று கூறினார். இந்த நிலையில் தெருக்களில் தண்டோரா போட்ட அய்யனார் மீது மட்டப்பாறை ஊராட்சி நிர்வாகிகள் விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற முறைகேடுகள் மற்றும் மோசடிகள் நடைபெற்று வருவதால், அதனை யூனியன் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.