செப்டம்பர் 12, 2024 • Makkal Adhikaram
திருப்பூரில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்த நிலையில் மோதலில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. அந்தவகையில் திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் கடந்த 8ஆம் தேதி சுமார் 600 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த சிலைகளை ஆற்றில் கரைக்க நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து இந்த சிலைகள் அனைத்தும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதியான டவுன்ஹால் பகுதி வழியாக ஆலங்காடு பகுதியில் நடைபெற்ற இந்து முன்னணி அமைப்பின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அனைத்து விநாயகர் சிலைகளும் உர்வலமாக வந்து கொண்டிருந்தன.
அப்போது திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. தங்கள் பகுதி விநாயகர் சிலைகள் தான் முன்னால் செல்ல வேண்டும் என ஒரு குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கு பின்னால் வந்த மற்றொரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இரு தரப்பு இளைஞர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் சத்தியமூர்த்தி என்பவர் படுகாயமடைந்தார். இதையடுத்து இந்த மோதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த மோதல் தொடர்பாக நவீன்குமார், வெங்கடேஷ், தேவா, ஸ்ரீதர், பாலாஜி ஆகிய 5 பேர் மீது வீரபாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.