பத்திரிகையாளர்கள்பெயரில் மக்களையும், அரசு அலுவலர்களையும், மிரட்டி, மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று, கோவை கலெக்டர் கிராந்தி குமார் எச்சரித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது: பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் செய்தியாளர்கள், போட்டோகிராபர்கள், வீடியோ கேமராமேன்கள் ஆகியோர், அரசுக்கும் அரசு அலுவலர்களுக்கும், மக்களுக்கும் பாலமாக செயல்பட்டு சமூகத்திற்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இத்தகைய பொறுப்புமிக்க பணி மேற்கொள்ளும்பத்திரிகையாளர்கள் மத்தியில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில், மோசடி செயல்களில் பலரும் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
கோவையில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர், அரசு அதிகாரிகளை மிரட்டுகின்றனர். அவர்களை பற்றி அவதுாறு செய்திகளை வெளியிடுகின்றனர். தங்களுக்கு உயரதிகாரிகளை நன்கு தெரியும் என்று சொல்லி, கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுப்பதாக, மனுக்களை பெறுகின்றனர்.ஏமாற்று வார்த்தைகளை சொல்லி, பணத்தையும் பறிக்கின்றனர். இது சம்பந்தமாக நிறையபுகார்கள் வருகின்றன. அதோடு அரசு அலுவலர்களை மிரட்டுதல், போலீஸ் ஸ்டேஷன்களில் சமரசம் என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து புகார்கள் செய்வதாகவும்,ஏராளமான புகார்கள் வருகின்றன.
கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் முன், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள், போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி, மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.