அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள, உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள், பெண்களுடன் வந்து பி.ஏ.பி., அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது: உப்பாறு அணைக்கு சட்டப்படி 1.3 டி.எம்.சி., நீர் வழங்க வேண்டும்.
இதன் வாயிலாக நேரடியாக, 6,060 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, 10 ஆயிரம் நிலங்களும் பயன்பெறுகின்றன. மேலும், 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உப்பாறு அணை உள்ளது.தற்போது, பிஏ.பி., தொகுப்பு அணைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் உள்ளன. மழை பெய்தால் தண்ணீர் வீணாகி கேரளாவுக்கு சென்று கடலில் தான் கலக்கும். உபரிநீர் வீணாகாமல் தடுக்க திருமூர்த்தி அணைக்கு கொண்டு வந்து, அங்கு இருந்து உப்பாறு அணைக்கு நீர் வழங்கலாம். ஆனால், அதிகாரிகள் அவ்வாறு செய்வதில்லை.உப்பாறு அணைக்கு தண்ணீர் வழங்க கூறினால், திட்டக்குழுவிடம் கேட்டு முடிவெடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். எங்களது உரிமையை கேட்டால், அதற்குரிய பதில் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கலைந்து செல்லாமல் போராட்டம் தொடரும்.இவ்வாறு, கூறினர்.நேற்று இரவு வரை, அதிகாரிகள், போலீசார் பேச்சு நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்தது.