செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram
ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராக்கிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குமரேசன், அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.
ஒப்பந்தம், அவுட்சோா்சிங், தினக்கூலி நியமன முறையை ரத்து செய்து, அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்ட ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் வரன்முறைப்படுத்த வேண்டும். பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகளைதனியாா்மயப்படுத்துவதை உடனே நிறுத்திட வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை காலமுறை ஊதிய திருத்தத்தை உறுதி செய்து, நிறுத்திவைக்கப்பட்ட அகவிலைப்படியை நிலுவையின்றி வழங்க வேண்டும். அரசின் கண்காணிப்பில் விரிவான கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அனைத்து அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், ஒப்பந்த, தினக்கூலி ஊழியா்களுக்கும் உத்திரவாதப்படுத்த வேண்டும். தேசிய கல்விக்கொள்கையை கைவிட வேண்டும். திருத்தம் செய்யப்பட்ட புதிய மூன்று குற்றவியல் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும்.
வருமானவரி உச்ச வரம்பை ரூ.10 லட்சமாக உயா்த்திட வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.