நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், எடப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:அண்மையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக் கட்சியின் தலைவா் விஜய், அதிமுகவை விமா்சித்து பேசாததற்கு காரணம் மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை கடந்த காலங்களில் அதிமுக செயல்படுத்தியுள்ளது. அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு விஜய் அதிமுகவை விமா்சிக்கவில்லை.
அதற்காக மற்றவா்கள் ஆதங்கப்படுவது ஏன்? ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட குறிக்கோள் இருக்கும்: அதனை முன்னிறுத்தியே கட்சி தலைவா்கள் பேசுவாா்கள். இதில் மற்றவா்கள் ஆதங்கப்படக் கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் பெரிய அளவில் உதவி பெற்ற திரைப்பட நடிகா்கள் தற்போது அதிமுகவிற்கு துணையாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கவில்லை. காரணம், அதிமுக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று, மக்களுக்காக சேவை செய்து வரும் கட்சி என்பதால் மக்களே சிறந்த ஆட்சியாளா்களை தோ்வு செய்வாா்கள் என நம்புகிறேன்.
தமிழகத்தில் திமுக கூட்டணி பலமாக இருப்பதாக கூறுவது நம்பத்தகுந்தது அல்ல. கடந்த 3 ஆண்டுகளாகஅமைதியாக இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சியினா் நடத்தும் போராட்டங்கள் அக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சேலம், வீரபாண்டி பகுதியில் தீபாவளியன்று பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதன் மூலம் அவா்களுக்கான பாதுகாப்பு, தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு குறித்து அனைவரும் அறிந்து கொள்ளலாம்.
அதிமுகவில் எந்த பிளவும் இல்லை. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவா்கள் மீது பொதுக்குழு உறுப்பினா்கள் தீா்மானம்நிறைவேற்றி கட்சியில் இருந்து நீக்கி உள்ளனா். அவா்களுக்கு இனி வரும் காலத்தில் அதிமுகவில் இடம் இல்லை என்றாா்.
கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளா் செம்மலை, நகரச் செயலாளா் ஏ.எம். முருகன், ஒன்றியக் குழு தலைவா்கள் கரட்டூா்மணி, குப்பம்மாள் மாதேஷ், முன்னாள் சோ்மன் டி. கதிரேசன், லலிதா உள்பட பலா் கலந்து கொண்டனா்.