ஆகஸ்ட் 26, 2024 • Makkal Adhikaram
சட்டத்தை ஆயுதமாக எடுத்து தீர்ப்பு வழங்குங்கள்,” என ஈரோட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி சார்பு நீதிமன்றம், எழுமாத்துார் மாவட்ட முன்சீப் மற்றும் நடுவர் நீதிமன்றம் துவக்க விழா மற்றும் பெருந்துறையில் புனரமைக்கப்பட்ட நடுவர் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழா, காணொளி காட்சி வாயிலாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.அதில் கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, கொடுமுடி சார்பு நீதிமன்றத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
மக்களுக்கு விரைவாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக, புதிதாக நீதிமன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை, ‘நீதியரசர்கள்’ என, அவர்கள் மாண்பை குறிப்பிடுகின்றனர்.நீதித்துறையில் அவ்வாறான நீதிபதிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை நீதிக்காகவே பணி செய்கின்றனர் என்பதை உணர வேண்டும். நம் நோக்கம், தர்மத்தை காக்க வேண்டும் என்பதேயாகும்.
சட்டசபையும், நீதிமன்றமும் முற்றிலும் வேறு. என் தந்தையும், மூத்த வக்கீலுமான முத்துசாமி மற்றும் பலரும் சேர்ந்து ஈரோட்டில் மாவட்ட நீதிமன்றம் உருவாக்க வேண்டும் என அரசிடம் கோரிய போது, சட்ட அமைச்சர் மறுத்து விட்டார்.பின், முதல்வர் அண்ணாதுரையை சந்தித்து பேசினர். ஈரோடு பகுதியில் உள்ள குற்ற வழக்குகள், பிற வழக்குகளின் புள்ளி விபரங்களை வழங்கி, நீதிமன்றத்தின் அவசியத்தை விளக்கினர். ‘ஈ.வெ.ரா., பிறந்த மண்ணில் மாவட்ட நீதிமன்றம் தேவை என்பது பரிசீலிக்கப்படும்’ என்றார்.
மேலும்,முதல்வர் அண்ணாதுரை, ‘காயங்கள் நியாயப்படுத்தப்பட வேண்டும்; நியாயங்கள் காயப்படுத்தப் படக்கூடாது’ என்றார்.இதை நான் இப்போதும், வக்கீல்கள், நீதிபதிகளிடம் கூறி, அதன் உண்மையை விளக்குவேன். சட்டத்தை ஆயுதமாக எடுத்து பாகுபாடின்றி தீர்ப்பு வழங்குங்கள்.
அப்போது தான் நீதிமன்றத்துக்கு அங்கீகாரம், நம்பிக்கை கிடைக்கும். நீதிமன்றங்கள் புதிதாக வருவது நல்லது தான். ஆனால், அது மக்களை நோக்கி செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.மேலும்,
உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதிகள் அனிதா சுமந்த், சதீஸ்குமார், குமரேஷ்பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.