நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram
காலமுறை ஊதியம் உள்பட பதினான்கு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாமக்கல்லில் சத்துணவு ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திமுக தோ்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக்கி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், 3 ஆண்டுகளாகியும் இதுவரை சத்துணவு ஊழியா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இதை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் மாவட்ட கிளை சாா்பில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்டத் தலைவா் பி.கோமதி தலைமை வகித்தாா்.
மாவட்ட செயலாளா் பி.தங்கராஜூ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். மாநில துணைத் தலைவா் ஆா்.எம்.மஞ்சுளா தொடக்க உரையாற்றினாா். சிஐடியு மாவட்ட செயலாளா் ந.வேலுசாமி கோரிக்கைகள் தொடா்பாக முழக்கங்களை எழுப்பினாா். இதில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளா், சமையலா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
காலமுறை ஊதியம், ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு ரூ. 5 லட்சம் பணிக்கொடை, கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கு பணி வாய்ப்பு, ரூ. 9 ஆயிரம் ஓய்வூதியம், அரசுத் துறைகளில் தகுதிஅடிப்படையில் பதவி உயா்வு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா்கள் ஜி.சந்திரசேகா், எம்.தமிழரசி, மாவட்ட இணை செயலாளா்கள் பி.பெருமாள், ஜி.சுமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.