
காமராஜர் காலத்தில் மக்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது ஒருவேளை சோறு சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு .படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் பசியால் வாடியது அந்த காலம். இந்த காலம் அப்படி அல்ல. இந்த காலத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி கொடுக்கிறார்கள். அதனால், யாரும் பட்டினியாக இல்லை. அப்போது கொடுத்தது உண்மையிலே அந்த மக்களுக்கு தேவையான ஒன்று. அதன் பிறகு மக்களின் வயிற்று தேவைகள் இல்லை. அப்போதெல்லாம் கேட்டுக் கூட வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு திருமணத்திற்கு கூட அழைக்காமலே வந்து சாப்பிடுவார்கள் .அந்த அளவிற்கு பசியின் கொடுமை இருந்தது. இப்போது அது இல்லை.
அதையே தொடர்ந்து அரசியலில் இந்த இலவசத்தை மக்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே தங்களுடைய தேர்தல் பரப்புரைகளில் இலவசத்தை அறிவித்துக் கொண்டு, அரசியல் கவர்ச்சிகரமான திட்டமாக இதைக் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன்கள் 7000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. அது உண்மையிலே அப்போது கடன் சுமையால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள், தேவையான ஒன்று.
அதேபோல் ,கடந்த அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் எட்டு கிராம், திருமண உதவித்தொகை 50 ஆயிரம் ரூபாய், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி ,ஏழை மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம், கர்ப்பிணி பெண்களுக்கு பணம், சத்து மாவு இவையெல்லாம் கொடுத்து வந்தது. இதிலும் ஒரு ஊழல் தான், இந்த ஊழல் என்பது அவர்களுடைய சுயநலம், அதாவது அவர்கள் பங்கு போட்டுக் கொள்வார்கள்.
இப்போது திமுக அரசு இதையெல்லாம் நிறுத்திவிட்டு, ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை என்று கொடுக்கிறார்கள். பேர் என்பது பளபளக்கும், இதுதான் இருக்கும் .அதில் ஒன்றும் குறைவிருக்காது .ஆனால், நம்ம மக்கள் அதுவே அவர்களுக்கு பெரிய தொகையாக போட்டி, போட்டுக் கொண்டு வாங்குகிறார்கள் .அந்த மனநிலைக்கு அவர்களை ஆளாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலைமை. இலவசத்தை வாங்கி பிழைப்பது கேவலம் என்று சில மக்கள் தான் நினைக்கிறார்கள். இவர்களுக்கு ஒரே வார்த்தை அவ வீட்டு பணமா கொடுக்கிறான் ? அரசாங்க பணம் தானே என்பது இந்த மக்களின் எண்ணம். இதை வைத்துக்கொண்டு எத்தனை நாள் நாம் சாப்பிட போகிறோம் ? என்பதை உணரவில்லை.
இது தவிர ,விலைவாசி உயர்வு ,வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மின்சார கட்டண உயர்வு , போன்ற எல்லாவற்றையும் உயர்த்தி இருக்கிறது திமுக அரசு. இதில் இந்த ஆயிரம் ரூபாய் பெரிதா ?என்பதுதான் மக்களின் விவரமானவர்கள் கேட்கின்ற கேள்வி? மேலும், இலவசத்தை கொடுத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்துவது, மக்களுக்கு தாங்க முடியாத ஒன்றாக உள்ளது. இப்போது துவரம் பருப்பு விலை கிலோ 200 ரூபாய் என்கிறார்கள். உளுத்தம் பருப்பு அதே விலைக்கு வந்துவிட்டது என்கிறார்கள் கடைக்காரர்கள்.
இப்படி மக்களுக்கு தேவையான அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு ஏறிக்கொண்டே போனால், அந்த அளவுக்கு மக்களுக்கு வருவாய் இல்லை. இதனால், மக்கள் வாழ்க்கை வாழ்வதற்கே போராட வேண்டி உள்ளது. இப்போதாவது இலவசத்தை ஏன் வேண்டாம் என்பது பற்றி மக்களுக்கு புரிந்து இருக்குமா?
அத்தியாவசிய பொருட்களும், வரி உயர்வும், மின்சார கட்டண உயர்வும் இல்லாமல் இருந்தாலே போதும் ,இலவசம் தேவையில்லை என்று சொல்பவர்கள் நகரத்தில். ஆனால், கிராமத்தில் ஒரு வண்டி வைத்துக் கொண்டு கூட சென்று, இலவசத்திற்கு கை ஏந்துகிறார்கள். அதனால், இனியாவது இலவசத்தின் உண்மையை மக்கள் புரிந்து கொள்வார்களா?