(1965 முன் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அரசியல் எங்கே? தற்போதைய அரசியல் எங்கே?)
அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை ஆகிவிட்டது .அரசியல் கட்சி என்பது சட்டத்தை ஏமாற்றுபவர்களின் தொழிலாகிவிட்டது. இதிலிருந்து எந்த கட்சியும் 100% தூய்மையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எல்லா கட்சியையும் கட்சிக்குள்ளும் சட்டத்தை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.
ஊழலுக்குள் கட்சி இருக்கிறது.
இங்கு அதிமுக, திமுகவில் அதிகம். மற்ற கட்சிகளில் இல்லையா? இருக்கிறது. எல்லா கட்சிகளிலும் ஊழல் பேர் வழிகள் இருக்கிறார்கள். இங்கே தலைவனே, ஊழல் பேர் வழியாக இருக்கும் போது, தொண்டர்கள் எப்படி இருப்பார்கள்? இது அரசியல் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் எழுகின்ற கேள்வி? முதலில் கட்சி தலைவனுடைய கருத்து, செயல்பாடு ,அவருடைய நேர்மை, அதன் பிறகு தான் தொண்டர்கள் .
ஒரு சில கட்சிகளில் தலைவர்களே நேர்மையற்றவர்களாக இருந்தால், அதை எப்படி அரசியல் கட்சி என்று ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால், அவர்களும் கட்சி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.அதனால், ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் பேசுகின்ற கருத்தை வைத்து, மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், செயல்பாட்டில், பேசியதற்கும், செய்வதற்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறது .
ஆட்சி ,அதிகாரம் எல்லாம் கையில் வந்து விட்டால், பொதுநலம் சுயநலமாகிவிடுகிறது. கூட்டம் சேர்ந்தாலே அதுவே அரசியல் ஆகிவிடுகிறது. அவர்கள் எதற்காக கூட்டம் சேருகிறார்கள்? என்பதுதான் இப்போது மிகப்பெரிய கேள்வியாக நடுநிலையாளர்களுக்கு இருந்து வருகிறது. எல்லாக் கட்சிகளுக்கும், கூட்டங்கள் சேர்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சமூக தொண்டர்கள் மத்தியில் தமிழ்நாடு இருக்கும்போது, பெருமையாகத்தான் இருக்கிறது.
இத்தனை கோடி பேர் சேவைக்கு தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் வறுமை இல்லாத மாநிலமாக மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அதிக கடனிலும், வறுமையிலும், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தங்கள் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்வாதார போராட்டத்தை மக்களுடைய வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் கோடிக்கணக்கில் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்றைய கார்ப்பரேட் ஊடகங்கள் இந்த சமூகத் தொண்டர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றி இருக்கலாம். இல்லை, இந்த சமூக தொண்டர்களாவது அவர்களுடைய வாழ்வாதாரத்தை மாற்றி இருக்கலாம்.
ஆனால், இவர்களுடைய வாழ்வாதாரம்தான் மாறிக் கொண்டு வருகிறதே தவிர,மக்களுடைய வாழ்வாதாரம் மாறவில்லை. மக்கள் இவர்களுடைய அரசியலுக்கு மாறி இருக்கிறார்கள். அதாவது, இவர்கள் கொடுக்கின்ற ஊழல் பணத்தை வாங்கிக் கொண்டு வாக்களிக்கிறார்கள் .இலவசங்களை ஏற்றுக் கொள்கிறார்கள்.
இந்த ஊழலையும், அதன் மூலம் மறைத்துக் கொள்கிறார்கள். இதுதான் அரசியல். கடந்த ஐம்பதாண்டு கால தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு.
இதை எப்போது மக்கள் மாற்றப் போகிறார்கள்? படித்த இளைஞர்கள், அரசியல் தெரிந்தவர்கள், பொதுநல நோக்கமுடைய பண்பாளர்கள், சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகைகள் இந்த அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை.ஆனால், குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு இது பழகிவிட்டது. இப்படிப்பட்ட அரசியலால் மக்களின் வாழ்வாதாரம் மாறாது. ஆனால், ஊடகங்களில் தான் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
இங்கே ஒருவரைப் பற்றி ,ஒருவர், மாறி, மாறி ஊழல்களையும், அவர்களுடைய மோசடிகளையும், கார்ப்பரேட் ஊடகங்களில், சொல்லி தங்களை நேர்மையானவர்கள் என்று பேசிய ஏமாற்றுவது தான், தமிழ்நாட்டின் அரசியல். எப்போது மக்கள் இதையெல்லாம் புரிந்து ,அவர்களுடைய செயல்பாட்டை கவனித்து வாக்களிக்கிறார்களோ ,அன்றுதான் தமிழ்நாட்டின் அரசியல் தூய்மையை நோக்கி பயணிக்கும்.