ஒரு குடும்பத்தில் தந்தை சம்பாதித்த சொத்துக்களை ,அவர் இன்னாருக்கு இது என்று எழுதி வைக்காமல், இறந்து விட்டால் அல்லது உயில் எழுதி வைக்காவிட்டால், அந்த சொத்து பாகப்பிரிவினை செய்வதற்கு நீதிமன்றங்களை நாட வேண்டி உள்ளது.
நீதிமன்றத்தில் வருடக் கணக்கில் அந்த பாகப்பிரிவினை வழக்குகள் தொடர்கிறது. இதனால் எத்தனையோ குடும்பங்கள் நாட்டில் பாதிக்கப்படுகிறது. இதை நம்பி பல குடும்பங்களில் கல்யாணம், படிப்பு செலவு, மருத்துவ செலவு, கடன் பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல், இந்த வழக்குகளால் அந்த சொத்துக்கள் 10 வருடம் ,15 வருடம் என்று வழக்கு போய்க்கொண்டிருக்கிறது. வழக்கறிஞர்கள் அந்த வழக்கை எத்தனை வருடம் வேண்டுமானாலும், வழக்காடுவார்கள்.ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தான் கவலைப்படுவார்கள்.
மேலும், இது பற்றி நீதிமன்றங்களும், எவ்வளவு காலத்தில் இந்த வழக்கை முடிக்க வேண்டும் ? என்று ஒரு காலக்கெடுவும் நிர்ணயிப்பதில்லை. தவிர, சட்டப்படி அந்த சொத்துக்கு யார் ? வாரிசுதாரர்களோ, அவர்களுக்கு தான் அந்த சொத்து போய் சேரும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அந்த சொத்தில் யாராவது ஒரு நபர் இந்த சொத்தின் மீது வழக்கு தொடுத்துவிட்டால், மீதி பேர் பாதிக்கப்படுகிறார்கள். தவிர,
நீதிமன்றம் வழக்கு தொடுத்தவரின் காரணங்களை ஆய்வு செய்யாமல் காலத்தை விரயம் செய்கிறது. தேவையற்ற காரணங்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவருக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இதுதான் இந்த வழக்கின் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. இது பற்றி நீதிமன்றம் ஆய்வு செய்தாலே, ஒரு வருடத்திற்குள் இந்த வழக்குகளை முடிக்க முடியும். வழக்கு தொடுத்தவர் நீதிமன்றத்திற்கு வராமலே, சாக்கு போக்கு காரணங்களை சொல்லி ,அவருடைய வழக்கறிஞர்களும், இவரும் சேர்ந்து வயதா வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் ஒருபோதும் கால நீடிப்பை செய்வது அர்த்தமற்றது.
அங்கு என்ன பிரச்சனை? அதில் என்ன இவருக்கு பிரச்சனை? இதை உடனடியாக சமர்ப்பிக்க சொல்லி, இந்த வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க முடியும். தேவையற்ற கால நீடிப்பு, வழக்கு விசாரணை இது எல்லாம் இதில் தேவைதானா? சரி அப்படியே இருந்தாலும், அந்த வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க முடியும். கடமைக்கு நீதிபதிகள் வழக்கை விசாரித்தால் முடியாது.
மேலும்,ஒரு குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், தந்தை இறந்த பிறகு வாரிசு சான்றிதழ் வழங்கி, அந்த சொத்தை நான்காக பிரித்து வருவாய்த்துறையே கொடுத்து விடலாம் .அல்லது அந்த நான்கு பேரும் விட்டுக் கொடுத்து ஒருவருக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அவர்கள் எடுத்துக் கொள்ள சம்மதித்தால், அதற்கு ஏற்றவாறு டிஆர்ஓ மூலம் ஒரு கமிட்டி அமைத்து பாகப்பிரிவினை செய்து கொடுத்து விடலாம். ஆனால் இந்த பாகப்பிரிவினை வழக்குகள் மிகவும் கொடுமையான விஷயம்.
மேலும் ,தற்போது பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது .அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும், அந்த சொத்தில் சரி சமமாக உரிமை உள்ளது. சட்டம் இதற்கு தெளிவாக இருக்கும் போது, இந்த பிரச்சனைக்காக ஏன் பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டும்? மேலும் ,எப்போது நீதிமன்றம் செல்லலாம் என்றால், ஒரு குடும்பத்தில் இரண்டு மனைவிமார்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்குள் யார் வாரிசு என்ற போட்டி வரும் போது அதில் சட்டப்படி திருமணம் செய்தவர்கள் யார் illegal ஆக திருமணம்? Properly யார்? போன்ற பிரச்சனைகள் எழும்போது, அதிலும் DRO மூலம் வைக்கப்பட்ட கமிட்டியில் பேசி தீர்க்க முடிந்தால், தீர்த்துக் கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் நீதிமன்றம் செல்லலாம்.
இது தவிர, ஒரு சிலர் வீட்டை விட்டு வெளியில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, அவர்களைப் பற்றி எதுவும் விசாரிக்காமல் வருவாய்த்துறை அதிகாரிகள் ஊரில் இருப்பவர்கள் மட்டுமே வாரிசு சான்று கொடுத்து, அந்த சொத்தில் அவர்களுக்கு மட்டுமே உரிமை என்று விற்று விட்டால், சட்டப்படி சம்பந்தப்பட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது கிரிமினல் குற்றமாகும். அவர்கள் மீது வழக்கு கூட தொடரலாம்.
மேலும் ,தந்தை இறந்த பிறகு, தாயை வைத்து அந்த சொத்தை அவர்கள் மீது இருக்கிறது என்று ஊரில் இருப்பவர்கள் எழுதிக் கொண்டாலும், அதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது. அதை பத்திர பதிவுத்துறை அலுவலகத்தில் பதிவு செய்தாலும், நீக்கும் அதிகாரம் டிஆர்ஓ கமிட்டிக்கு கொடுக்க வேண்டும்.
இதனால், நீதிமன்ற செலவு, மக்களின் மன உளைச்சல், இதையெல்லாம் தவிர்க்க முடியும். மேலும், சட்டப்படியான வாரிசுகள் யார்? என்பதை தெரிந்தால் அவர்களுக்கு வாரிசு சான்று வழங்கி ,அந்த சொத்தை டி ஆர் ஓ மூலம் அமைக்கப்பட்ட கமிட்டி பாக பிரிவினை செய்து கொடுக்கலாம். இதனால், பொது மக்களுக்கு நீதிமன்றம் செல்லும் தேவை இருக்காது. மேலும் இன்று பல லட்சம் வழக்குகள் இப் பிரச்சனைக்காக, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை தமிழக அரசு இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்து தீர்த்து வைத்தால், பொதுமக்கள் நிச்சயம் வரவேற்பார்கள்.