நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram
நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் போதைக்காக வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தீவிர சோதனை நடத்தி வருகின்றனா்.
சேலம் சரகத்துக்கு உள்பட்ட சேலம்நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள், மொத்த மருந்து கடைகளை அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனா். அந்த வகையில், சேலம், நாமக்கல் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மருந்து கடைகளில் மருத்துவா்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யக் கூடாது என அறிவுறுத்தபட்டுள்ளது. ஆனாலும், ஒருசில மருந்து கடைகளில் தூக்க, வலி நிவாரண மருந்துகளை விதிமுறைகளை மீறி விற்பனை செய்து வருகின்றனா். அவா்கள்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கடந்த மாதத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 35க்கும் மேற்பட்ட கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16 கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மருந்து கடைகள் தூக்க, வலி நிவாரண மருந்து மாத்திரைகளை மருத்துவா்கள் பரிந்துரையின்றி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா்.