அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram
நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம்.கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் கடந்த மாதம் வட மாநில கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையடித்த பணத்துடன் ராஜஸ்தான் பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரியில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் வழியாக தப்பி செல்ல முயன்றனர். அப்போது, குமாரபாளையம் அருகே அந்த கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் 2 பைக், ஒரு கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
சந்தேகத்தின் பேரில் விரட்டி சென்று சேசிங் செய்த நாமக்கல் போலீசார் அந்த கும்பலை பிடித்தனர். இதில் அந்த கும்பல் ஏடிஎம்மில் கொள்ளையடித்துவிட்டு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓட முயன்ற ஒருவரை என்கவுண்டர் செய்தனர். கேரளாவில் ஏடிஎம்களில் கொள்ளையடித்துவிட்டு தப்ப முயன்ற கொள்ளையர்களை சினிமா பாணியில் சேசிங் செய்து பிடித்த நாமக்கல் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலினும், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் அழைத்து பாராட்டி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (22.10.2024) நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு விழாவில் பங்கேற்பதற்காக வருகைப்புரிந்தார். அப்போது, அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட கண்காணிப்பாளர். ராஜேஷ் கண்ணன், உள்ளிட்ட வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்து, குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த சம்பவத்தை பாராட்டி கேரள தலைமை காவல் துறை இயக்குநர் டாக்டர். ஷேக் தர்வேஷ் சாஹிப்,, அவர்கள் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு, சம்பவம் நடைபெற்று 6 மணி நேரத்திற்குள் கொள்ளையர்களை பிடித்தது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின்போது. ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். காவல் துணை கண்காணிப்பாளர்கள் . இமயவர்மன்,,. முருகேசன், .ராஜா, காவல் ஆய்வாளர்கள் ., தவமணி,. ரங்கசாமி, துணை ஆய்வாளர் .செந்தில் குமார் மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 23 காவல் துறையினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது, காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு). சௌ. டேவிட்சன் தேவாசிர்வாதம். ., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் இருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.