அக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram
நாமக்கல் மாவட்டம் :பரமத்தி வேலூா் வட்டம், இருகூரில் செயல்பட்டு வரும் தனியாா் இரும்பு ஆலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் நிலுவை ஊதியத்துடன் கூடிய போனஸ் தொகை வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கபிலா்மலை அருகே உள்ள இருகூரில் தனியாா் இரும்பு ஆலையில் உத்தரபிரதேசம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த 120 தொழிலாளா்களும், நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 20 தொழிலாளா்களும் என மொத்தம் 140 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி, இரும்பு ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை கபிலா்மலை – பரமத்தி சாலையில் தொழிலாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் வட்டாட்சியா் முத்துக்குமாா், பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணி ஆகியோா்பேச்சுவாா்த்தை நடத்தியதில், ஆலை நிா்வாகத்தினா் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு போனஸ் உடன் கூடிய ஊதியம் வழங்குவதாக உறுதியளித்தனராம். ஆனால், அவா்கள் கூறியபடி வழங்கவில்லை எனக் கூறி ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து பரமத்தி வேலுாா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நாமக்கல் – கரூா் தேசிய நெடுஞ்சாலையில் தொழிலாளா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தொழிலாளா்களிடம் காவல் துறையினா் நடத்திய பேச்சுவாா்த்தையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து வேலூா் காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், வட்டாட்சியா்முத்துக்குமாா் ஆகியோா் தொழிலாளா்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.