ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram
சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது.
தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.
பின், ஜாமினில் வெளியே வந்த காதர் பாஷா, ‘தீனதயாளனுக்கு ஆதரவாக பொன்மாணிக்கவேல் செயல்பட்டார். அவரை வழக்கு ஒன்றில் தப்பிக்க வைக்க, என் மீது பொய் வழக்கு பதிந்து, கைது செய்தார். விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பொன்மாணிக்கவேல் மீது, டில்லி சி.பி.ஐ.,போலீசார் வழக்கு பதிந்தனர். ‘இதை சி.பி.ஐ.,விசாரிக்க அதிகாரமில்லை. உள்நோக்கில் சட்டவிரோதமாக வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்’ என, பொன்மாணிக்கவேல், உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார்.
இதில் இரு தரப்பு வாதங்களை கேட்ட உயர்நீதிமன்றம், பொன்மாணிக்கவேலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.