நாட்டில் எத்தனையோ ஊழல்வாதிகள், கிரிமினல்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து இருக்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே வீரப்பனுக்கு பொது மன்னிப்பு திமுக ஆட்சியில் கொடுத்திருக்க வேண்டும். ஆட்சி மாறிவிட்டது. அதனால், காட்சியும் மாறிவிட்டது.
வீரப்பனால் ஒரு கிராமமே பிழைத்து இருக்கிறது. வீரப்பனால் பல அரசியல் தலைவர்கள் பணம் பார்த்திருக்கிறார்கள். கர்நாடகாவில் இன்று மேகதாது அணை கட்டுவேன் என்று சொல்லக்கூடிய கர்நாடக அரசு, வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சொல்வது போல், வீரப்பன் ஒரு கேசட் அனுப்பினால் போதும் அங்கே எந்த அணையும் கட்ட மாட்டார்கள். வீரப்பன் ஒரு கடிதம் அனுப்பினால் போதும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் தானாக வந்துவிடும் .அவ்வளவு ஒரு வலிமையான ஆயுதம் தான் வீரப்பன் .அதை அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து இருக்க வேண்டும். இவ்வளவு வலிமையான ஆயுதமாக இருந்தாலும், வீரப்பன் தனக்கென எதையும் சேர்த்துக் கொள்ளவில்லை.
அந்த குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது. அவர்கள் எவ்வளவு வேதனைப்பட்டார்கள் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். ஒரு குடும்பமோ அல்லது ஒருவரோ பொதுவெளிக்கு வந்து விட்டால், அவர்களை வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்வது சில தமிழக ஊடகங்களில் வேலையாகி விட்டது. வீரப்பனால் லாபம் அடைந்த நக்கீரன் கோபால் கூட, இதுவரை அந்த குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. நக்கீரன் கோபாலுடைய தகுதி என்ன என்று பத்திரிகை உலகிற்கு தெரியும். மேலும், வீரப்பன் இல்லை என்றால் இன்று கோபால் எங்கே என்று கூட தமிழக மக்களுக்கு தெரியாது .அது எங்களை போன்ற பத்திரிகையாளர்களுக்கு தெரிந்த உண்மை.
முத்துலட்சுமி பேசக்கூடிய உண்மைகளை கூட ,இன்று எந்த அரசியல்வாதியும் பேசவில்லை. வீரப்பன் குற்றவாளி என்று சட்டம் நிரூபித்தாலும், சமூகத்தில் வீரப்பனை போன்ற ஒரு வீரன், இதுவரை தமிழகத்தில் இல்லை. ஏனென்றால் ஒரு கர்நாடக மாநிலமே வீரப்பனை பார்த்து பயந்து இருந்தது. வீரப்பனை காவல்துறை கூட நேர்மையான முறையில் அவனுடைய சாவை எதிர் கொள்ளவில்லை. சூழ்சியோடு தான் அவனை பிடித்து இருக்கிறார்கள்.
அந்த அளவிற்கு தமிழகம், கர்நாடகம் இரண்டு மாநிலத்திற்கும், சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரன் அரசியல் பொது மன்னிப்பு கேட்கும் போது நிச்சயம் ,அதை ஜெயலலிதா கூட ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
இன்று சமூகத்தில் பார்க்கிறோம். கோடி கணக்கில் கொள்ளையடித்துவிட்டு, அரசியலில் சட்டத்தை வளைத்து, சமூகத்தை ஏமாற்றி நல்லவனாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சியினரை விட, வீரப்பன் எந்த விதத்திலும் கெட்டவன் அல்ல.