அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த போர்வெல் மெக்கானிக் முருகேசன், தனது மனைவி ஜோதியை சந்தேகப்பட்டாராம்.
குடிப்பழக்கம் வேறு இருந்ததாம். குடித்துவிட்டு வந்து அடிக்கடி சந்தேகப்பட்டு அடித்து உதைத்து வந்தாராம் முருகேசன். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி, அவரை அடித்துக் காலி செய்தார். அதன்பின்னர் அவர் நடத்திய நாடகம் போலீஸையே தூக்கிவாரிப்போட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டியை சேர்ந்த 37 வயதாகும் முருகேசன் என்பவர் அந்த பகுதியில் போர்வெல் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜோதி (31). இவர்களுக்கு 5 மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள். முருகேசனுக்கு மது பழக்கம் உள்ளதாம். குடித்துவிட்டு வரும் முருகேசன், அடிக்கடி சந்தேகப்பட்டு தாக்குவது வழக்கமாம்.
அப்படித்தான் கடந்த அக்டோபர் 11-ந் தேதி இரவு ஆயுதபூஜை அன்று மதுபோதையில் முருகேசன் வீட்டிற்குள் வந்தாராம். வீட்டிற்குள் வந்த உடன் முருகேசன் சோபாவில் படுத்தாராம். காலையில் அவர் படுத்திருந்த சோபாவில் உடல் எரிந்த நிலையில் முருகேசனின் பிணம்கிடந்திருக்கிறது.
இது குறித்து நாமக்கல் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவம் நடந்த காவேட்டிப்பட்டி கிராமத்திற்கு போலீசார் சென்றனர். இங்கு முருகேசனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடலை நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனையில், முருகேசனின் தலையில் பலத்த காயம் ஒன்று இருந்தது. அத்துடன் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. வீட்டில் முருகேசன், அவருடைய மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்தநிலையில், ஜோதி மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து போலீசார் ஜோதியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முருகேசன் தினமும் குடிபோதையில் வருவதை வழக்கமாக வைத்திருந்தாராம். ஜோதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்தாராம். அப்படித்தான் ஆயுதபூஜை அன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகேசனுக்கும், ஜோதிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜோதி இரும்பு ராடால் கணவர் முருகேசனின் தலையில் ஓங்கி அடித்தாராம். இதில் முருகேசன் மயக்கம் அடைந்து அவர் இறந்துவிட்டார்.
பின்னர் கொலை சம்பவத்தை மறைப்பதற்காக இறந்த கணவரின் தலை மற்றும் சோபாவில் தீக்குச்சியை பற்றவைத்து தீ வைத்து உள்ளார். போலீசாரிடம் மதுபோதையில் வந்த முருகேசன், பீடி பற்ற வைத்ததாகவும், அதில் சோபாவில் பற்றிய தீ, அவரது உடலுக்கு பரவி, அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.. ஆனால் போலீசாரின் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையால் ஜோதியின் நாடகம் அம்பலமானது. இதையடுத்து முருகேசனின் தாயார் அங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஜோதியை கைது செய்தனர். இந்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.